மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடி ஆட்சிக்கு நிச்சயம் குட்பை சொல்லும்!

கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி
சசிகாந்த் செந்தில்
சசிகாந்த் செந்தில்

கர்நாடகா தேர்தலில் இரண்டு தேசிய கட்சிகளும் இரண்டு தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது அதில் ஒருவர், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ். மற்றொருவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ். ஐபிஎஸ்ஸின் வியூகத்தை விட ஐஏஏஸ்ஸின் வியூகம் வெற்றியைத் தேடித்தந்துள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுத் தற்போது ஆட்சி அமைக்க உள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின்னால் டி.கே.சிவகுமார் போன்றவர்களின் வியூகங்கள் ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸ் தேர்தல் வியூகங்களின் பின்னணியில் இருந்த முக்கிய நபராக அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் பார்க்கப்படுகிறார். அவரிடம் கர்நாடக தேர்தல் வெற்றி, பாஜகவை வீழ்த்திய தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து பேசினோம். இனி அவரது பேட்டி.

கர்நாடக வெற்றி காங்கிரஸுக்கு எப்படிச் சாத்தியமனாது?

இந்த வெற்றி எப்படிச் சாத்தியமனாது என்றால் கடந்த 8 மாதங்களாக நாங்கள் எடுத்து வைத்த மக்கள் பிரச்சினை சார்ந்த கேள்விகளுக்கு பாஜகவால் பதிலளிக்க முடியவில்லை. மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து நாங்கள் மேற்கொண்ட பிரச்சாரம் எங்களுக்குக் கைகொடுத்தது. அத்துடன் எங்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது என நினைக்கிறேன்.

ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனக் கூறிவிட்டு ஊழலில் திளைத்தார்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். கமிஷன் ஆட்சிதான் கர்நாடகாவில் நடந்தது. சாதாரணமாக பைக் ஓட்டி செல்பவரைக் கூப்பிட்டுக் கேட்டாலும் பாஜக அரசின் ஊழலைச் சொல்வார்கள். இவை அனைத்தும் சேர்ந்துதான் எங்களின் வெற்றியைச் சாத்தியப்படுத்தியது.

மோடி, அமித்ஷா பிரச்சாரங்கள் எடுபடாமல் போனதற்கு என்ன காரணம் நினைக்கிறீர்கள்?

அவர்கள் ஒரு மாடல் வைத்திருக்கிறார்கள். அது மக்களைத் திசைதிருப்பும் மாடல். குறைந்தபட்சம் எதன் மீது மக்கள் கோபமாக இருக்கிறார்களோ அதற்கு இவர்கள் பதில் சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அவர்களுக்கு இயல்பாக என்ன வருமோ அதைத்தான் இங்கு நடத்தினார்கள். உதாரணமாக, என்னைத் திட்டிவிட்டார்கள், ஆஞ்சநேயரை அவமானப் படுத்திவிட்டார்கள் எனத் தொடங்கினார்கள்.

இப்படியாக மோடி, அமித்ஷா இருவருமே மக்களுக்கான பிரச்சினைகளைப் பேசாமல், மத அரசியல் செய்தும், ரோடு ஷோக்கள் நடத்தியும் தங்களுக்குத் தாங்களே பூக்களைத் தூவிக் கொண்டால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள். லஞ்சம் பெருகிவிட்டது என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால், அதற்கான பதிலை அவர்கள் கூறவில்லை. இந்தத் தேர்தலில் மோடி அலை பாஜகவுக்கு எதிரான அலையாக மாறியது என்பதே உண்மை.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி
தேர்தல் பிரச்சாரத்தில் மோடி

கர்நாடக மக்களிடம் அண்ணாமலையின் பிரச்சாரமும், தேர்தல் வியூகங்களும் எடுபடாமல் போய்விட்டதே..?

அண்ணாமலையின் வியூகங்களையும் பிரச்சாரங்களையும் மக்கள் இந்தமுறை நிராகரித்துவிட்டார்கள். கர்நாடகத்தில் முக்கியத் தலைவர்கள் பலர் இருக்கும் போது அவர்களைக் கடந்து அண்ணாமலைக்குப் பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரிகிறது. மாவட்டத் தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு குறுகிய காலத்தில் அரசியலுக்கு வந்த அண்ணாமலையை அழைத்து வந்து சீட் முடிவு செய்தது எல்லாம் அவர்கள் செய்த பெரிய தவறாக நான் பார்க்கிறேன். அண்ணாமலைக்கு எதிராக லோக்கல் பாஜகவினர் வேலை பார்த்தார்கள்.

அவர்களுடைய ஒரே நோக்கம் மோடியை மட்டும் பிம்பமாகக் காட்ட வேண்டும். மாநிலத்தலைவர்களே இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். இதை எப்படி ஒரு தனித்துவமான மாநிலமும் அந்த மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். இந்தியா முழுவதும் ஒரே ஒரு சூப்பர் மேன் தான் இருக்க வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள். அதுதான் அவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

சசிகாந்த் செந்தில்
சசிகாந்த் செந்தில்H_S_Manjunath

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த சவால்கள்..?

தேர்தலே மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பாஜகவின் பணபலம், பதவி. மோடி வந்தால் பெங்களூருவையே அவர்களால் விலைக்கு வாங்க முடியும். அதெல்லாம் எங்களால் முடியாது. ஊடகங்கள் எங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு ஏதும் அழுத்தமா என்றும் எனக்குத் தெரியவில்லை. சமூக வலைதளங்கள் வாயிலாகவும், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி போன்றவர்களின் பிரச்சாரத்தின் வாயிலாகவும் தான் எங்களால் மக்களைத் தொடர்புக் கொள்ள முடிந்தது. இதெல்லாமே எங்களுக்கு மிகப்பெரிய சவால்தான்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தனிப் பெருபான்மையுடன் வெற்றி பெற்றாலும், முதல்வரைத் தேர்தெடுப்பதில் காங்கிரஸில் ஏன் இத்தனை தடுமாற்றம்?

தடுமாற்றம் என்றெல்லாம் இல்லை. இரண்டு தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள். அது ஜனநாயக முறையில் மிகவும் சாதாரணமான ஒன்று. கட்சிக்குள் ஜனநாயகம் இல்லையென்றால் ஒரே நாளில் தன்னிச்சையாக அறிவித்துவிட்டுப் போய்விடலாம். இரண்டு தரப்புக்கும் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதெல்லாம் விசாரித்துத் தான் முடிவு செய்வார்கள். காங்கிரஸுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது அதன்படிதான் எல்லாம் நடக்கிறது.

கர்நாடகாவைப் போன்று தமிழகத்திலும் காங்கிரஸில் மறுமலர்ச்சி ஏற்படுமா?

தமிழகக் காங்கிரஸில் ஓர் ஒருங்கிணைப்பு இல்லை. அதனைச் சரி செய்ய வேண்டும். அதற்கு ரொம்பக் காலங்கள் தேவைப்படாது. அதனைச் செய்தாலே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்திவிட முடியும் அல்லது இப்போது இருப்பதை விட 5 அல்லது 10 சதவீதம் அளவுக்கு கட்சியை வளர்த்துவிட முடியும். இதை நோக்கித்தான் தமிழகத்தில் எங்களுடைய அடுத்தகட்ட இலக்கு இருக்கும்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?

நிச்சயமாக இருக்காது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளோடு மக்களவைத் தேர்தலை ஒப்பிட முடியாது; ஒப்பிடவும் கூடாது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கட்டமைப்புகள், அப்போது காங்கிரஸ் வைக்கக் கூடிய கோஷங்கள், மக்களுக்கான வாக்குறுதிகள் என அனைத்துமே வித்தியசமாக இருக்கும். அதனால் இந்த தேர்தல் முடிவுகள் மக்களவையில் எதிரொலிக்காது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடி ஆட்சிக்கு நிச்சயம் குட்பை சொல்லும்.

சசிகாந்த் செந்தில்
சசிகாந்த் செந்தில்

காங்கிரஸை ஆதரிக்க ரெடி. அதேசமயம், மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில் அந்தக் கட்சிகளை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்கிறாரே மம்தா..?

மம்தா சொல்வதை 100 சதவீதம் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இப்போது அதே மனநிலையில் தான் காங்கிரஸும் உள்ளது. இதைத்தான் ராகுல் காந்தி பேசக் கூடிய ஒவ்வொரு மேடைகளிலும் கூறி வருகிறார். மம்தா எடுக்கக் கூடிய இந்த முடிவு பாஜகவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பாஜக இந்தியாவுக்கே ஒவ்வாத கட்சி. நிச்சயம் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in