
அதிமுகவின் பொதுக்குழு நாளை நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதில் இதற்கு முன் எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத பல புதுமைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை வசதிகள் என்பதைவிட, பிரச்சினை இன்றி பொதுக்குழுவை நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் என்றே சொல்லலாம்.
அதிமுக பொதுக்குழு நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதை நடத்தலாமா, கூடாதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு மீது நாளை காலை 9 மணிக்குத்தான் விசாரணை நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் இன்றே சென்னையில் முகாமிட்டுள்ளனர். இத்தனைக்கும் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
அதேநேரம் பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் கனஜோராக ஏற்பாடுகள் நடந்துவருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,655 பேருக்கும், மாவட்ட வாரியாக சீரியல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருப்பதுபோல் ஆர்.எப்.ஐ.டி இயந்திரம் முகப்பிலேயே வைக்கப்பட்டுள்ளது. அதில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்த பின்பே உள்ளே செல்ல முடியும். இதனால் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உள்ளே செல்ல முடியாது.
செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு வர முடியாதபடியும், பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு நடக்கும் இடத்திற்கு வர முடியாதபடியும் இந்த அடையாள அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழு இரண்டிலும் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அதற்கேற்ப பிரத்யேகமாக அடையாள அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ஒரு அரசியல் கட்சி இவ்வளவு தொழில்நுட்ப வசதிகளுடன் பொதுக்குழு கூட்டுவது இதுவே முதல்முறை என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.