தமிழ் மொழி குறித்து அண்ணாமலை பேசுவது பச்சைப்பொய்யா?

தமிழ் மொழி குறித்து அண்ணாமலை பேசுவது பச்சைப்பொய்யா?

சென்னை பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, " இந்தி திணிப்பதை தமிழக பாஜக ஏற்காது" என்றும், " தேசிய கல்விக்கொள்கையின்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் தமிழ் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று தமிழக அரசு கொண்டு வராதபோது, மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது" என்றும் கூறினார். அத்துடன், " கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தபோது ஏன் கட்டாய தமிழ் வழிக்கல்வியைக் கொண்டு வரவில்லை" என்று கேள்வியையும் எழுப்பினார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேட்டி குறித்து மொழி உரிமைச் செயற்பாட்டாளரும், மூத்த பத்திரிகையாளருமான ஆழி செந்தில்நாதனிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், " 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் தான் படிக்க வேண்டும் என்று எங்கெல்லாம் சாத்தியம் இருக்கிறதோ, அங்கு செய்யுங்கள் என்று தான் தேசியக் கல்விக்கொள்கை சொல்கிறது. தாய் மொழியில் தான் படிக்க வேண்டும் என்று கல்விக்கொள்கை கட்டாயப்படுத்தவில்லை. எனவே, அண்ணாமலை பச்சைப்பொய் சொல்கிறார்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " ஒன்றிய அரசின் எந்த சிபிஎஸ்சி பள்ளியில் தாய்மொழி கல்வி போதிக்கப்படுகிறது? அதை மாற்ற பாஜகவினர் வழி சொல்லியிருக்கிறார்களா? அத்துடன் ஒன்றிய அரசின் எந்த பள்ளி தாய் மொழியில் நடக்கிறது? தாய்மொழியில் தான் படிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு, தமிழக அரசு, ஏன் உலகம் முழுவதும் உள்ள அரசுகள் சொல்லும். ஆனால், உண்மையில் சட்டரீதியாக அதற்கு வழியில்லை. பிரச்சினை என்று வரும் போது, அந்தநேரத்தில் மட்டும் பெற்றோர் சாய்ஸ் என்று நீதிபதிகள் சொல்லி விடுவார்கள். சட்டப்பூர்வமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் தான் படிக்க வேண்டும் என்ற பரிந்துரை தான் இருக்கிறது. அது சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. அப்படி ஆக்கப்பட்டிருந்தால் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்சி பள்ளிகளில் அமலாகியிருக்கிறதா என்ற விபரத்தை அண்ணாமலை சொல்வாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

ஆழி செந்தில்நாதன்.
ஆழி செந்தில்நாதன்.

மேலும், " 'இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் மொழி தான் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை' என அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியாவின் ஆட்சி மொழியாக அனைத்து மொழிகளும் வரவேண்டும் என்று மொழி உரிமை தளத்தில் இயங்குபவர்கள் வலியுறுத்துகிறோம். அத்துடன் இணைப்பு மொழியைச் சட்டப்பூர்வமாக ஆங்கிலம் தான் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். அதன் அடிப்படையில் தான் சில மாநிலங்களில் இந்தியும், சில மாநிலங்களில் ஆங்கிலமும் உள்ளது. மக்கள் எந்த மொழியில் பேச வேண்டும் என்பதை எந்த அரசும் தீர்மானிக்க முடியாது. அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம், இந்திய அரசு தொடர்புக்கு ஆங்கில மொழி என்பது தான் சட்டம். அதை மாற்ற முயற்சி செய்து கொண்டு பாஜகவினர் எதை எதையோ பேசுகின்றனர். நமது ஒரே கோரிக்கை மொழி சமத்துவம், மொழி உரிமை. இந்திக்கு இருக்கிற உரிமை, எல்லா மொழிகளுக்கும் வேண்டும். இதற்கு ஒரு முடிவே சொல்லாமல் அண்ணாமலை பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று கூறினார்.

அமித் ஷாவின் இந்தி திணிப்புப் பேச்சுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பால் தான் , பாஜக தலைவர் அண்ணாமலை இப்படி பேசுகிறாரா என்று ஆழி செந்தில்நாதனிடம் கேட்டதற்கு, " பாஜக தமிழகத்தில் இதுவரை மொழி விஷயத்தில் என்ன செய்துள்ளது? எதுவுமே செய்யவில்லை. இப்போது திடீரென அண்ணாமலை சொல்வதால் அந்த கட்சி மாறி விட்டது என்று அர்த்தமா? மொழி என்பது படிக்கிற பிரச்சினை இல்லை. மொழி என்பது அதிகாரப் பிரச்சினை. தமிழ் மொழிக்கு இந்திய அரசியல் சாசனத்தில் என்ன இடமிருக்கிறது? ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறதா இல்லையா? இது தான் அடிப்படை. அந்த அடிப்படையை விட்டு விட்டு மற்றதை பேசுவது வேலைக்கு ஆகாத பேச்சு. ஆட்சியில் இருக்கும் பாஜக, இந்திய அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கை. தற்போது பாஜக தானே மத்தியில் ஆட்சியில் இருக்கிறது? எல்லா மொழிகளையும் சமம் என நினைத்தால் அதை முதலில் செய்யட்டும் " என்று அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in