`நாட்டையே ஆளுநர் அவமதித்துவிட்டார்'- சபாநாயகர் அப்பாவு

`நாட்டையே ஆளுநர் அவமதித்துவிட்டார்'- சபாநாயகர் அப்பாவு

மத்திய அரசை திருப்திப்படுத்தினால் உயர் பதவி கிடைக்கும் என்ற நோக்கில் தமிழக ஆளுநர் இன்று சட்டப்பேரவையில் மத்திய அரசை திருப்திப்படுத்தும் விதமாக  செயல்பட்டிருப்பதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர்,  திராவிட மாடல்,  அமைதி பூங்காவாக தமிழகம் உள்ளிட்ட பல வார்த்தைகளை பேசாமல் தவிர்த்ததோடு தமிழக அரசின் உரையில் இல்லாததையும் பேசி இருக்கிறார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் மரபு மீறி நடந்து கொள்வது குறித்து எழுந்து பேச முதல்வர் ஸ்டாலின் முயற்சித்தபோது அவையில் இருந்து அவர் வெளியேறிவிட்டார். 

ஆளுநர்  நடந்து கொண்ட விதத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  வரும் 13-ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக  விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது நடந்தது குறித்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார். அப்போது அவர் கூறுகையில்,  "பொது மேடையில் பேசுவது போல் சட்டமன்றத்தில்  ஆளுநர் பேசுவது நியாயம் இல்லை. தமிழக அரசின் உரையைத்தான் வாசிக்க வேண்டும்.  அதில் ஏதாவது கருத்து வேற்றுமை இருந்தால் அரசிடம்தான் சொல்லி அதை முன்னமே மாற்றம் செய்திருக்க வேண்டும். 

பிரதமர் நரேந்திர மோடி எழுதிக் கொடுக்கும் உரையைத்தான் குடியரசுத் தலைவர் வாசிப்பார். மோடி தலைமையிலான  அரசால் கொண்டுவரப்படும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரால் உடனடியாக ஒப்புதல் தரப்படுகிறது.  பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட்ட நபர்களுக்கு உயர் பதவி கிடைத்திருக்கிறது. 

அப்படி உயர் பதவி கிடைக்கும் நோக்கில் மத்திய அரசை  திருப்தி படுத்த தமிழக ஆளுநர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் உள்ளது.  அம்பேத்கர் பெயரையே அவர் உச்சரிக்க மறுத்திருப்பது வேதனை அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் தேசிய கீதத்திற்கு முன்னதாக ஆளுநர் பேரவையிலிருந்து அவர் வெளியேறியிருப்பது  நாட்டையே அவமதிப்பதாகும்.

முதலமைச்சர் கண்ணியமான முறையிலேயே பேசினார். உரைக் குறிப்பில் இல்லாததை ஆளுநர்  பேசியதாலேதான் முதலமைச்சர் அதற்கு பதில் அளிக்க வேண்டியது இருந்தது. ஆளுநர்  பேசியதற்கு வருத்தம் மட்டுமே முதல்வர் தெரிவித்தார்.  ஆளுநர் சபை மரபை மீறியிருந்தாலும் ஆளுநர்  உரையின் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in