ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது… ஈபிஎஸ் தரப்பில் கடிதம் வரவில்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அதிரடி

ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது… ஈபிஎஸ் தரப்பில் கடிதம் வரவில்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு  அதிரடி

"ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கொடுக்கப்பட்ட கடிதம் பரிசீலனையில் இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓபிஎஸ் கடிதத்தின் அடிப்படையில் விருப்பு வெறுப்பு இல்லாமல் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுப்போம்.” என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்ட விதிகளின்படி இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை என்பதால் அந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்தார்.

அதிமுகவில் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க் கட்சி தலைவராக ஈபிஎஸ்சும், எதிர்க் கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ்சும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டப்பேரவை தலைவருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், ‘பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி அதிமுக சார்பாகச் சட்டமன்ற பதவிகள் குறித்து மனுக்கள் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறுகையில், “எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது அலுவலக உதவியாளர் மூலம் என்னுடைய தனிச்செயலாளரிடம் நேற்று முன்தினம் ஒரு தபால் கொடுத்திருந்தார். அந்த கடிதம் பரிசீலனையில் இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து எந்த கடிதமும் வரவில்லை. எனது ஆய்வில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதத்தின் பேரில் சட்டப்படி விதிப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுப்போம். விருப்பு வெறுப்பு இல்லாமல் ஜனநாயக முறையில் சட்டமன்றம் நடைபெறுவது போல நியாயமான முறையில் நடவடிக்கை இருக்கும் ” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in