இந்தி எதிர்ப்பு, ஆறுமுகசாமி மற்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் மீது விவாதம்: சபாநாயகர் அப்பாவு தகவல்!

இந்தி எதிர்ப்பு, ஆறுமுகசாமி மற்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் மீது விவாதம்: சபாநாயகர் அப்பாவு தகவல்!

நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்தி எதிர்ப்பு, ஆறுமுக ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை உள்ளிட்டவற்றின் மீது விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அதில் மறைந்த முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதோடு இன்றைய கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முழுநேரமும் சட்டப் பேரவை நடைபெறும் எனச் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கூறுகையில், “நாளை நடைபெறும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் 2022-2023 ஆண்டிற்கான கூடுதல் செலவினத்திற்கான வரவு-செலவு திட்டத்தினை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார். அதனைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான ஓர் அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்படும். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை இரண்டும் நாளை சட்டமன்றத்தில் வைக்கப்படும்.

நாளை மறுநாள் கூடுதல் செலவினத்திற்கான மாநியக் கோரிக்கையின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும். சட்டமன்றத்தில் துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக எதிர்க்கட்சிகளில் தரப்பில் இதுவரை நான்கு கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கிறார். அந்த அடிப்படையில் அவர் சட்டமன்ற ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதிமுகவின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in