பழங்குடி பட்டியலில் குருவிக்காரர், நரிக்குறவர் சமுதாயங்கள்: மக்களவையில் நிறைவேறியது மசோதா

பழங்குடி பட்டியலில் குருவிக்காரர், நரிக்குறவர் சமுதாயங்கள்: மக்களவையில் நிறைவேறியது மசோதா

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரைச் சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

பிரதமருக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், " நரிக்குறவர்கள் சமூகம், மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று. பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைப் பெற தகுதியுடையவர்களாவர். இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்," நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசியிருந்த மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரைச் சேர்க்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி, பிரிஜியா சமூகத்தினருக்கும் கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in