அதிமுகவின் ஏக்நாக் ஷிண்டே நானா? எஸ்.பி.வேலுமணி அதிரடி பதில்

 எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

தான் பாஜகவில் இணைவேன் என திமுகவினர் தான் கூறி வருவதாகவும், தன் மீது திமுகவிற்கும், முதல்வருக்கும் என்ன கோபம் என்றும் அதிமுகவின் சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவின் 52ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் அண்ணாசிலை பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ”இந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்த திட்டமும் தராமல் கோவை மக்கள் சிரமப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடியார் எப்போது மீண்டும் முதல்வராவார் என எதிர்பார்த்துள்ளனர். எடப்பாடியார் சொன்னதை நாம் செய்தாலே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்” என பேசினார்.

அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, ”அதிமுக இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 52வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக வருங்கால முதல்வர் எடப்பாடியாரால் கொடியேற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி கோவையில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் சிறப்பான முறையில் கொடியேற்றி கொண்டாடப்படட்டது. இரண்டரை ஆண்டுகளாக கோவைக்கு திமுக எந்த திட்டமும் வழங்கவில்லை.

தரமற்ற வேலைகளாக கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் முழுமையாக முடிப்பதில்லை. நேற்று பெய்த மழையில் வட்டவழங்கல் அலுவலர் உயிரிழந்துள்ளார். மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மாதம் ஒருமுறை பராமரிப்பு செய்ய வேண்டும். கோவையில் அஜாக்கிரதையாக பணிகள் நடைபெறுகிறது” என்றார்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை

அதிமுகவின் ஏக்நாக் ஷிண்டே என சமூக வலைதளங்களில் கூறுவது குறித்தான கேள்விக்கு, ”அவர் கட்சிக்கு துரோகம் செய்தவர். இந்த பிரச்சினையை யார் கிளப்புகிறார்கள்? என்பது உங்களுக்கு தெரியும். ஏதாவது செய்து குளிர்காய வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். அதிலும் முக்கியமாக திமுக தான். திமுக ஐடி விங் தெளிவாக உள்ளது.

நான் இந்த கட்சி ஆரம்பத்தில் இருந்து என் தந்தை காலத்தில் இருந்து வந்தவன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை அடுத்து எடப்பாடியார் எங்களுக்கு தலைவர். குழப்பம் செய்ய வேண்டும் என திமுக உட்பட யார் நினைத்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. எடப்பாடியார் தலைமையில் வீறுநடை போட்டு கொண்டிருப்போம். நாடாளுமன்ற தேர்தலில் 40ம் வெற்றி பெறுவோம்.

திரளான அதிமுகவினர் பங்கேற்பு
திரளான அதிமுகவினர் பங்கேற்பு

என் மேல் திமுகவிற்கும் முதல்வருக்கும் என்ன கோபம்? திமுக உட்பட சிலர் பாஜகவுடன் இணைவார்கள் என கூறி வருகிறார்கள். ஆனால் எடப்பாடியார் தெளிவாக நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார். இருப்பினும் சிலர் அவ்வாறு கூறுகிறார்கள். கூட்டணியில் இருந்து வந்து விட்டோம். கூட்டணி கிடையாது என தெளிவாக நாங்கள் கூறிவிட்டோம்” என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in