டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி மனு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

வேலுமணி
வேலுமணி

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகவும் தமிழக அரசுத்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபங்களை தலைமை நீதிபதி அமர்வு, நிராகரித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலுமணி தரப்பில், ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, புகாரில் முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்த்து. அதன் அடிப்படையில் புகார் முடித்து வைக்கப்பட்டது எனவும், டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரப்பட்டது.

மேலும், முதல் அல்லது இரண்டாம் அமர்வு தான் விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், எம்.பி., எம்.எல்.ஏக்கள் விசாரிக்கும் அமர்வுக்கு மனுக்களை மாற்றக்கூடாது எனவும் வேலுமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அமைச்சராக இருந்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது எனவும் தற்போது புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணை தேதியை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும் எனவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை, எம்.பி - எம்.எல்.ஏ.க்க்ளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், வேலுமணி தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in