முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சுப.உதயகுமார்
சுப.உதயகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சுப.உதயகுமார்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பச்சை தமிழகம் கட்சியின் தலைவரும், அணு உலை எதிர்ப்பாளருமான சுப.உதயகுமார் வீடியோ ஒன்றை தன் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதில் சுப.உதயகுமார் பேசும்போது, "கூடங்குளம் அணுக்கழிவு பிரச்சினை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரமருக்கு தமிழ் மக்கள் சார்பில் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் வரவேற்கிறேன். வீரம் செறிந்த, அறவழி போராட்டத்தை முன்னெடுத்த குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அத்தனை பேர் சார்பிலும் எங்கள் நன்றியையும், பாராட்டுகளையும் முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் ஆழ்ந்த கவலை, அச்சத்தையும் நான் பகிர்ந்துகொள்கிறேன் என்னும் மக்கள் சார்பு நிலைப்பாட்டை அந்தக் கடிதத்தில் எடுத்திருக்கிறார்கள். இந்த அணுக்கழிவு மையத்தில் விபத்துகளோ, பேரழிவுகளோ, உள்ளூர் மக்களுக்கு ஆபத்தோ ஏற்படலாம் என நியாயமாக மக்களின் பக்கம்நின்று முதல்வர் தெரிவிக்கிறார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இருதீர்வுகளையும் முன்வைக்கிறார்.

முதல் இரு அணு உலைகளில் மட்டுமல்ல, இப்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மூன்று, மற்றும் நான்காவது அணு உலைகளில் இருந்தும் திட்டமிடப்படும் 5, 6-வது அணு உலைகளில் இருந்து வெளிவரும் ஏராளமான கழிவுகளை முதல் ஒப்பந்தப்படி ரஷ்யாவுக்கு கொண்டு செல்லுங்கள். அது சாத்தியம் இல்லையென்றால் மக்கள் வசிக்காத, சூழல் பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆழ்நிலை கிடங்கு அமைத்து அங்கே கொண்டுபோய் பாதுகாத்து வையுங்கள் என கடிதத்தில் எழுதியுள்ளார். இது முதல்வரின் நியாயமான நிலைப்பாடு.." எனத் தொடங்கி தன் பத்து நிமிட உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறார் சுப.உதயகுமார்.

Related Stories

No stories found.