குழப்பத்தோடு சென்னைக்குப் புறப்பட்ட தென்மாவட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

பயணம் ஒன்று...நோக்கம் இரண்டு!
குழப்பத்தோடு சென்னைக்குப் புறப்பட்ட தென்மாவட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுக பொதுக்குழு, நாளை திட்டமிட்டப்படி நடக்குமா, நடக்காதா என்று நாளை காலை வழங்கப்பட உள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெரியவரும் என அக்கட்சித் தொண்டர்கள் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

பொதுக்குழு நடந்தால் அதில் நிறைவேற்றப்போகும் தீர்மானங்கள் போன்ற எதிர்பார்ப்புகளை நேரடியாக காண இன்று காலை தென் மாவட்டங்களில் இருந்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமில்லாது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோரும் வாகனங்களில் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டம் நாளை திங்கட்கிழமை சென்னையில் நடக்கிறது. இதில் தற்காலிகப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வுசெய்ய அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மற்றொரு புறம் இந்தப் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் நாளை காலை 9.00 மணிக்குத் தீர்ப்பு வர உள்ளது. 9.15 மணிக்குப் பொதுக்குழு நடக்கும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்துள்ளனர்.

பொதுக்குழு நடக்குமா, நடக்காதா என்ற பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் சென்னையை நோக்கி நேற்று காலை முதல் படையெடுக்க தொடங்கினர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வாகனங்களில் பொதுக்குழு, செயற்குழு நிர்வாகிகள் மட்டுமில்லாது பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கார்கள், வேன்களில் சென்னைக்குப் புறப்பட்டனர். அதனால், மாவட்ட கட்சி அலுவலகங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரளவு இருக்கும் மாவட்ட அலுவலகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூட்டப்பட்டிருந்தன.

பயணம் ஒன்று...நோக்கம் இரண்டு!

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், எடப்பாடி பழனிசாமி தற்காலிகப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அதேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றப் பொதுக்குழுவுக்குத் தடை விதித்தால் அதைக் கொண்டாடுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் தமிழகம் முழுவதும் இருந்து சென்னையில் குவிந்துள்ளனர். இரு தரப்பு நிர்வாகிகளும் சென்னையில் குவிந்துள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் நாளை காலை வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்து அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். அது ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சாதகமாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்வினை என்னவாக இருக்கும்? ஓபிஎஸ்சுக்குச் சாதகமாக இருந்தால் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள் எனும் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

ஆக, தமிழகத்தின் பிரதானக் கட்சிகளில் ஒன்றான அதிமுகவின் எதிர்காலம் நாளைய நிகழ்வுகளில் தீர்மானிக்கப்படவிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in