உ.பி: யோகியின் தேநீர் விருந்தில் பங்கேற்கும் எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் யோகமா?

உ.பி: யோகியின் தேநீர் விருந்தில் பங்கேற்கும் எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் யோகமா?

உத்தர பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக இன்று (மார்ச் 25) பதவியேற்கும் யோகி ஆதித்யநாத், பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்திருக்கிறார். முலாயம் சிங்கின் மகனும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவையும் அழைத்திருக்கிறார்.

முன்னதாக, நேற்று நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பாஜக தலைவராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆளுநர் ஆனந்திபென் படேலைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் இடம்பெறப்போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தலில், 41.29 சதவீத வாக்குகளுடன் 255 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது பாஜக. கடந்த 37 வருடங்களில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவுசெய்து, மீண்டும் தேர்தலில் வென்று முதல்வராகும் முதல் முதல்வர் யோகி ஆதித்யநாத் தான். 2024 மக்களவைத் தேர்தலுக்கு அச்சாரமாக இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. எனவே, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது பாஜக.

இன்று மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவிருக்கும் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

85 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இந்த பிரமாண்ட விழாவில் அக்‌ஷய் குமார், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாலிவு நட்சத்திரங்களுடன், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த அனுபம் கெர், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

இன்று பாஜக எம்எல்ஏ-க்களில் சிலரைத் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார் யோகி ஆதித்யநாத். அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், எல்லா பாஜக எம்எல்ஏ-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். எப்படியும் அமைச்சர் பொறுப்பு யார் யாருக்கு என்பது இன்று முடிவாகிவிடும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in