சோனியா காந்தி தனது எம்.பி நிதியில் 70% சிறுபான்மையினருக்கே செலவிட்டார்... அமித்ஷா குற்றச்சாட்டு!

அமித்ஷா
அமித்ஷா

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது எம்.பி நிதியில் 70% க்கும் அதிகமாக சிறுபான்மையினருக்காக செலவிட்டார். காந்தி குடும்பம் பொய் சொல்வதில் வல்லுநர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்காக ரேபரேலியில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய அமித்ஷா, "நீங்கள் காந்தி குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்தீர்கள், ஆனால் இங்கே எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியில் நம்பிக்கை இல்லை. அவர்கள் மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின்போது உங்களிடம் வருவதில்லை.

காங்கிரஸ் இளவரசர் இங்கு வாக்கு கேட்க வந்துள்ளார். அவர்களுக்கு பல ஆண்டுகளாக வாக்களித்து வருகிறீர்கள். ஆனால் எம்.பி நிதியில் இருந்து ஏதாவது பெற்றீர்களா? பெறவில்லை என்றால் அது எங்கே போனது?. அது அவர்களின் வாக்குக்கு சென்றது. சிறுபான்மையினருக்காக சோனியா காந்தி 70% க்கும் அதிகமான தொகையை தனது எம்.பி நிதியிலிருந்து செலவிட்டுள்ளார்.

சோனியா, ராகுல்
சோனியா, ராகுல்

இந்த காந்தி குடும்பம் பொய் சொல்வதில் வல்லுநர்கள். தற்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1 லட்சம் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். தெலங்கானா தேர்தலில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.15,000 தருவதாக கூறினர். மாநில பெண்கள் அவர்களை தேர்ந்தெடுத்தனர். ரூ.15,000 பற்றி மறந்து விடுங்கள், ரூ.1,500 கூட கொடுக்கவில்லை.

இங்கே நிறைய பேர் இது குடும்ப சீட்னு சொன்னாங்க... உண்மைதான். ரேபரேலி மக்கள் காந்தி மற்றும் நேரு குடும்பங்களை பல ஆண்டுகளாக வெற்றி பெற வைத்துள்ளனர். ஆனால் இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சோனியா ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் எத்தனை முறை ரேபரேலிக்கு வந்தனர்?. சரி, சோனியா ஜியின் உடல்நிலை சரியில்லை. ஆனால் ராகுல் அல்லது சகோதரி பிரியங்கா வந்திருக்கிறார்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

ரேபரேலி பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்குக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மோடிஜியின் வளர்ச்சிப் பயணத்துடன் ரேபரேலியை இணைப்போம்” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக சோனியா காந்தி வசம் இருந்த ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இப்போது ராகுல் காந்தி போட்டியிடுகிறார். ரேபரேலியில் ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in