
பாரத் ஜோடோ யாத்திரையுடன் என்னுடைய இன்னிங்ஸ் நிறைவு பெறுகிறது என சோனியா காந்தி தெரிவித்திருப்பது காங்கிரஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு, இரண்டாம் நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி உள்ளிட்டோர் பேசினார்கள். அப்போது அவர் கூறுகையில், “ நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகவும் சவாலான காலத்தை எதிர் நோக்கி இருக்கிறோம். பாஜகவினர் பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பாக முடக்கி வருகிறார்கள். வெறுப்பெனும் நெருப்பில் மென்மேலும் பாஜக எண்ணெய் வார்த்து வருகிறது. சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் பாதிப்படைவது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு ஒரு தீர்வு காணவும், பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டவும் உரிய செய்தியை மக்களை சந்தித்து தெளிவாக சேர்த்தாக வேண்டும்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட ஒத்த அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க, தியாயகங்களையும் செய்யவும் காங்கிரஸ் தயாராக இருக்கிறது” என்று தன் பங்குக்கு பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு சூசகம் தெரிவித்தார். கூட்டத்தின் அங்கமாக பாரத் ஜோடோ யாத்திரையை முன்னெடுத்த ராகுல் காந்திக்கும், கட்சியை 22 ஆண்டுகளாக வழி நடத்திய சோனியா காந்திக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று ரெய்ப்பூர் வந்த பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும் பெரிதாக பேசப்பட்டது. சுமார் 6 ஆயிரம் கிலோ ரோஜாப்பூக்களைக் கொண்டு 2 கிமீ நீள தொலைவை இதற்காக கட்சித் தொண்டர்கள் அலங்கரித்திருந்தனர்.
கட்சியின் தலைமை பீடத்திலிருந்து சோனியா காந்தி முழுமையாக வெளியேறப்போகிறார் என்பதை அவரது பேச்சும், பாஜகவை தோற்கடிக்க பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை விட்டுத்தர காங்கிரஸ் கட்சித் தயார் என்பதை கார்கேவும், பிரியங்கா காந்திக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதை அவருக்கான வரவேற்பும் தெரிவிப்பதாக காங்கிரஸார் மத்தியில், மேற்படி சூசகங்களுக்கான விளக்கங்கள் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன.