
மதுரை. கே.புதூர் மண்மலைசாமி தெருவைச் சேர்ந்தவர் டி.கே.பிரியதர்ஷினி. இவர். இன்று காலை வாக்களிப்பதற்காக, 14-வது வார்டு வாக்குச்சாவடியான ஆர்.சி. நடுநிலைப்பள்ளிக்குச் சென்றார். கணவருடன் வரிசையில் நின்று வாக்குச்சாவடிக்குள் சென்றதும், அவரது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த வாக்குச்சாவடி அலுவலர்கள், “நீங்கள் ஏற்கெனவே ஓட்டுப் போட்டுவிட்டீர்களே” என்றார்கள். “இல்லை நான் இப்போதுதான் வந்தேன். வேண்டுமானால் எனது இடதுகை சுட்டுவிரலைப் பாருங்கள்” என்று காட்டினார்.
“அதெல்லாம் தெரியாது. உங்கள் பெயரில் யாரோ ஓட்டுப் போட்டுவிட்டார்கள்” என்று தெரிவித்து அவரைத் திருப்பியனுப்பிவிட்டார்கள். இதுகுறித்து அவர், மதுரை வடக்கு மண்டல உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் மனு கொடுத்தார்.
இதேபோல, மதுரை தியாகராஜர் நன்முறைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போடச் சென்ற வசந்தி என்பவரின் வாக்கையும், அவருக்கு முன்பே யாரோ போட்டுவிட்டார்கள். இதுகுறித்தும் தேர்தல் அலுவலர்களிடம் புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, டெண்டர் ஓட் முறையில் அவரை வாக்குப்பதிவு செய்ய வாக்குச்சாவடி அலுவலர்கள் அனுமதித்தனர்.