மதம் பிடித்த சிலர் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார்கள்: கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் பேச்சு

மதம் பிடித்த சிலர் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார்கள்: கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் பேச்சு

சிறுபான்மை, பெரும்பான்மை எனக் கூறி தேர்தல் அரசியல் செய்து லாபம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் விரைவில் பாடம் கற்பிக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்

மதுரை அரசரடியில் நேற்று இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில்  அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு  கேக்வெட்டி, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பிறகு அவர் பேசுகையில், " 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது அண்ணாவின் கருத்து. அதுதான் என் கருத்தும். நாம் அனைவரும் வெவ்வேறு மதங்களில் பிறந்திருக்கிறோம். ஆனால், அனைவரும் இந்தியர்கள். இதை உணர்ந்து மனிதத்தன்மையோடு வாழவேண்டும். மதம் பிடித்த சிலர் நமக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார்கள். மதத்தின் அடிப்படையில் இன்று உலகம் பிரிந்து மனித குலத்தையே அச்சுறுத்தும் கையில் தீவிரவாதம் வளர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது.

ஆன்மிகத்தில் அரசியலைப் புகுத்தி குரூர எண்ணம் படைத்த சுயநலவாதிகள் சிலர்  இறைத்தன்மையையே தனது கருப்பொருளாக்கியிருக்கிறார்கள். அதோடு, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க மதம், சாதியின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் தரம் தாழ்ந்த கால கட்டத்தில் இருக்கிறோம். இந்த விஞ்ஞான காலத்தில் மனிதநேயம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருவது வேதனையளிக்கிறது.

சிறுபான்மை, பெரும்பான்மை எனக் கூறி தேர்தல் அரசியல் செய்து லாபம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தேர்தல் முடிவு விரைவில் பாடம் கற்பிக்கும்.  செக்யூலரிசம் என்ற பெயரில் சிலர் உங்களை ஏமாற்றி வருகின்றனர். இந்தியாவை அமைதி பூங்காவாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் காந்தியின் எண்ணம். ஆங்கிலேயரிடமே ஆட்சி இருந்திருக்கலாம் என நினைக்கும் வகையில் தற்போது மதங்களை காட்டி நம்மிடையே பிரிவினை உருவாக்கி வருகின்றனர்.

மதச்சார்பின்மை என்று கூறிகொண்டு சாதி, மதப் பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். மக்களிடையே மதம் என்ற பெயரில் குட்டையைக் குழப்பி ஆட்சிக்கு வரவேண்டும் என்று செயல்படுகின்றனர். தமிழ், சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரால் பிரிவினையை உருவாக்கியிருக்கின்றனர். அதோடு, தாத்தா முதல் கொள்ளுப்பேரன் வரை பரம்பரையாக ஆட்சியிலிருக்க வேண்டும் என்பதற்காக பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். ஆன்மிகத்தில் உள்ளவர்கள் யாரையும் அழிக்க நினைக்க மாட்டார்கள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். 

மனித சமூகத்தில் அன்பையும், பாசத்தையும் எடுத்துரைப்பதுதான் மதம். தமிழகம் என்றென்றும் அமைதி்ப் பூங்காவாக இருக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். அனைத்து சிறுபான்மையினரையும் அன்பு காட்டி அரவணைப்பதுதான் எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின்  எண்ணம்" என்று பேசினார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in