திரிபுராவில் பாஜகவுக்கு சறுக்கல்: விஸ்வரூபம் எடுக்கும் திப்ரா மோதா கட்சி!

பிரத்யோக் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மா
பிரத்யோக் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மாதிரிபுராவில் பாஜகவுக்கு சறுக்கல்: விஸ்வரூபம் எடுக்கும் திப்ரா மோதா கட்சி!

திரிபுரா வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போதைய சூழலில் பாஜக பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மாநிலக் கட்சியான திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

திரிபுராவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் இன்று காலையில் பாஜக சுமார் 40 இடங்களில் முன்னிலை வகித்தது, இதன் காரணமாக பாஜகவினர் உற்சாகமாக இருந்தனர். ஆனால் அதன்பின்னர் பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 30 இடங்களிலும், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களிலும், திப்ரா மோதா கட்சி 13 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. திரிபுராவில் பெரும்பான்மைக்குத் தேவையான 31 என்ற எண்ணிக்கைக்கு குறைவான இடங்களில் முன்னிலை வகிப்பதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திரிபுராவில் இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட திப்ரா மோதா கட்சி தற்போது 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிபுரா அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோக் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மா இக்கட்சியின் தலைவராக உள்ளார். ஒருவேளை திரிபுரா சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் திப்ராமோதா கட்சி, அம்மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் சூழல் உருவாகும்.

60 இடங்களைக் கொண்ட மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தற்போதைய சூழலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 22 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 7 இடங்களிலும், பாஜக 8 தொகுதிகளிலும், யுடிபி 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மேகாலயாவில் பெரும்பான்மைக்குத் தேவையான 31 இடங்களை எந்தக் கட்சியும் பெறாத சூழ்நிலை நிலவுகிறது.

அதேபோல 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ காஜெட்டோ கினிமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் என்டிபிபி-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும், என்பிஎப் 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், மற்றவர்கள் 13 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். நாகாலாந்தில் ஆளும் என்டிபிபி-பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதால் அக்கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in