என்னதான் நடக்கிறது கன்னியாகுமரி திமுகவில்?

முதல்வரிடம் ஆசிபெறும் சுரேஷ்ராஜன் குடும்பம்
முதல்வரிடம் ஆசிபெறும் சுரேஷ்ராஜன் குடும்பம்

குமரி திமுகவில் முக்கிய நிர்வாகிகளாக வலம்வந்த பலரும் உள்கட்சித் தேர்தலில் பதவியை இழந்துள்ளனர். மாற்றுக்கட்சியினருக்கும் வாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர் சுரேஷ்ராஜன். திமுகவில் அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையே பனிப்போர் எழுந்த நேரத்திலும் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதியாக நின்றவர். பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த சுரேஷ்ராஜன், முதல்முறை அமைச்சரானபோது 33 வயதுதான்! முதல்வரின் குடும்பத்தினருக்கும் சுரேஷ்ராஜனின் மீது நல்ல அபிப்ராயம் உண்டு. அதனால்தான் சுரேஷ்ராஜனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பின்பும், நாகர்கோவிலில் நடந்த அவரது மகன் தமிழின் திருமணத்திற்கு துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி என முதல்வர் வீட்டுப் பெண்களே கலந்துகொண்டனர். நேரில் வரமுடியாத சூழலில் ‘இது நம் கழக விழா’ என வாழ்த்துச் செய்தி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சுரேஷ்ராஜன் குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து மணமக்களை வாழ்த்தியும் அனுப்பினார்.

இந்த அளவுக்குச் செல்வாக்கு கொண்டிருந்தாலும், நாகர்கோவில் மாநகரச் செயலாளராக இருந்த மகேஷ் மேயர் பதவியை நோக்கி ஓடியபோது, பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிலேயே கட்டம் கட்டப்பட்டார் சுரேஷ்ராஜன். ஆனால் அவரது பதவி நீக்கத்தின் பின்பு நியமிக்கப்பட்ட மண்டலத் தலைவர், நகரமைப்புக் குழுத்தலைவர் பதவியையும்கூட பாஜகவினரே பெற்றுள்ளதைக் கோடிட்டுக் காட்டுகின்றனர் சுரேஷ்ராஜன் ஆதரவாளர்கள்.

முதல் சறுக்கல்!

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளை அதிமுக வாரிச் சுருட்டியது. பிற கட்சிகளைப் பொறுத்தவரை பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனும், பாமகவின் அன்புமணியும் மட்டுமே வென்றனர். அதிலும் குமரியில் பணத்தை வாரிக்கொட்டிய அதிமுகவே மூன்றாவது இடத்துக்குப்போக, திமுகவோ நான்காவது இடத்திற்குப் போனது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தோற்றுப்போன திமுக, கட்சி அமைப்புரீதியாக செயல்படும் மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.

அப்போதுதான் குமரி கிழக்கு, மேற்கு என இரு மாவட்டங்கள் உதயமாகின. கிழக்கை மு.க.ஸ்டாலின் ஆதரவோடு சுரேஷ்ராஜன் தக்கவைக்க, மேற்கை கனிமொழி ஆதரவோடு மனோ தங்கராஜ் கைப்பற்றினார். அப்போதிருந்து தொடங்கிய அதிகார யுத்தம் இப்போதும் எதிரொலிக்கிறது.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

குமரி மாவட்ட அரசியலைப் பொறுத்தவரை இங்கே கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கைவிட மதங்களுக்கு இருக்கும் செல்வாக்கு அதிகம். இந்து, சிறுபான்மையினர் என்னும் இருதுருவ அரசியல் மட்டுமே இங்கு எதிரொலிக்கும். அந்தவகையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஒட்டுமொத்த சிறுபான்மை வாக்குகளையும், அதிமுக, பாஜக கூட்டணி இந்துகள் வாக்குகளையும் வசீகரிப்பதே குமரி அரசியல்! இந்தக் கட்சிகளின் கூட்டணிகள் உடையும்போது பாஜக எளிதாகக் கரைசேரும். குமரி கிழக்கு மாவட்டத்தில் இந்துக்கள் வாக்குகள் பெரும்பான்மையாக இருப்பதன் எதிரொலியால் கடந்த தேர்தலில் நாகர்கோவில், கன்னியாகுமரியில் பாஜக, அதிமுக கூட்டணி எளிதாக வென்றது. நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ்ராஜனின் தோல்வி, மனோவை அமைச்சரும் ஆக்கியது.

இதனால் இருவருக்கும் இடையே கசப்புணர்வு அதிகரித்தது. மனோ பக்கத்தில் மாநகரச் செயலாளர் மகேஷ் முதல் ஆளாக நகர்ந்தார். அதற்குக் கைமேல் பலனாக மேயர் பதவியும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியும் கைகூடின. இவர்கள் அணியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டினும் சேர்ந்துகொள்ள தனிமரமானார் சுரேஷ்ராஜன்! தங்கள் அரசியல் எதிரியாக நினைத்த சுரேஷ்ராஜனை வீழ்த்தியதுவரை வாகைசூடிய மனோ தங்கராஜ், மகேஷ் அணியினர் அடுத்தடுத்து எய்த அம்புகள் சுரேஷ்ராஜனை நோக்கி நிர்வாகிகளை நகர்த்தியுள்ளது.

மேயர் மகேஷ்
மேயர் மகேஷ்

கனிமொழியால் கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி வேட்பாளர் ஆனவர் ஹெலன் டேவிட்சன். கனிமொழி அணி என்பதாலேயே மனோவுக்கு நெருக்கமாக இருந்த இவரும் இப்போது சுரேஷ்ராஜன் அணிக்கு மாறியுள்ளார். மாவட்டப் பொருளாளர் கேட்சன் தொடங்கி பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் சுரேஷ்ராஜன் பக்கம் நிற்கிறார். தீவிரக் கட்சிப் பணியாற்றிவந்த ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, நெஞ்செழியன் உள்பட பலரது பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. மாற்றுக்கட்சியினரும் பொறுப்புக்கு வந்திருப்பதாக அதிருப்தி குரல் ஒலிக்கிறது.

தாமரை பாரதி
தாமரை பாரதி

இதுகுறித்து ‘காமதேனு’ இணையதளத்திடம் பேசிய திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, “திமுக தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார்களா என்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் சுரேஷ்ராஜனின் ஆதரவாளர்கள் எனக் கருதிக்கொண்டு பலரையும் தூக்கிவிட்டனர். அந்த வகையில் என்னிடம் இருந்த அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் என் ஒன்றியத்தில் இருந்து ஒரு நிர்வாகியும் அணிமாறாமல் அரணாக இருந்தேன்.

கன்னியாகுமரி தொகுதியில் ஆஸ்டின் தோல்வியடைந்தபோதும், அவரது சொந்த ஒன்றியமான ராஜாக்கமங்கலம் தெற்கில்தான் அவருக்கு வாக்குகள் மிகக்குறைவு. அங்கு 7,000 வாக்குகள் திமுக பின்தங்கியது. இத்தனைக்கும் அங்கு ஒன்றியச் செயலாளராக ஆஸ்டினின் மைத்துனர் லிவிங்ஸ்டன் உள்ளார். அவருக்கு இப்போதும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என் ஒன்றியத்தில் 1,400 வாக்குகளே குறைவு. ஆனால் என்னைப் பொறுப்பில் இருந்து தூக்கியிருப்பதை எப்படிப் புரிந்துக்கொள்வது?” என்றார்.

மேலும், “இப்போதுகூட முதல்வருக்கு எதிராக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி ஒருவரை நான் கொடுத்த புகாரின்பேரிலேயே கைதுசெய்தனர். குமரி திமுகவில் நடப்பதை முதல்வர் கவனிக்க வேண்டும்” என்று தாமரைபாரதி கூறினார்.

ஆனால் அமைச்சர், மேயர் ஆதரவாளர்களோ, ‘செயல்படாத நிர்வாகிகள்தான் மாற்றப்பட்டுள்ளனர். திட்டமிட்டு யாருக்கு எதிராகவும் செயல்படவில்லை. குமரியில் ஐடி பார்க் தொடங்கி, பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாலைப் பணிகள் நடந்துவருகின்றன. மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அரசு மட்டத்திலும், கட்சியை பலப்படுத்த கட்சிமட்டத்திலும் அமைச்சரும், மேயரும் உழைக்கிறார்கள்’ என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in