சிவகங்கையும் சிதம்பரமும்... 5

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
பிரச்சாரத்தில் ப.சிதம்பரம்...
பிரச்சாரத்தில் ப.சிதம்பரம்...

காரைக்குடிக்கு அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம் அண்டக்குடி. அந்தப் பகுதியின் பெரு நிலக்கிழார் குப்புசாமி சேர்வை. தேர்போகி பகுதியின் தலைமை அம்பலக்காரர். தீவிர காங்கிரஸ்காரர். அவரின் 4-வது புதல்வர் முத்துராமன், அப்போதைய ஒன்றுபட்ட முகவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்.

1977 சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் நான்கு முனைப் போட்டி. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பசுவும் கன்றும் சின்னத்தில் தலைவர் ப.சிதம்பரம் களமிறங்கினார். அவரின் அழகும், மொழி ஆளுமையும், அறிவாற்றலும் பிரச்சார உத்திகளும் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின. ஓட்டுக்குப் பணம் கேட்கும் கலாச்சாரம் அப்போதே இருந்தது. அப்படிக் கேட்டவர்களை அனல் பறக்க விரட்டினார் தலைவர் சிதம்பரம்.

திமுகவின் சார்பில் சித.சிதம்பரம், அதிமுகவின் இரட்டை இலையில் பொ.காளியப்பன், ஜனதா கட்சியின் ஏர் உழவன் சின்னத்தில் பழ.கருப்பையா ஆகியோர் ப.சிதம்பரத்துடன் அப்போது மோதியவர்கள்.

கண்டனூரிலிருந்து செட்டிநாட்டு அரசரின் மகள் தலைவர் சிதம்பரத்தின் தாயார் லெட்சுமி ஆச்சி, அண்டக்குடி குப்புசாமி சேர்வையை தனது வீட்டுக்கே வரவழைத்து, “நம்ம தம்பி எலெக்‌ஷன்ல நிக்கிது... பாத்துக்குங்க. தம்பி கூடவே இருங்க” என அன்புக் கட்டளையிடுகிறார். அதை தட்டமுடியாமல் தடுமாறிப் போகிறார் சேர்வை. ஏனெனில், அதிமுக வேட்பாளர் பொ.காளியப்பன் அவருக்கு மிக நெருங்கிய உறவினர்; அடுத்த ஊர்க்காரர்.

அண்டக்குடி குப்புசாமி சேர்வை
அண்டக்குடி குப்புசாமி சேர்வை

ஆனாலும் லெட்சுமி ஆச்சியின் கட்டளையை அவரால் மறுக்க முடியவில்லை. மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர். முகத்துக்கு நேரே மறுக்க முடியாத மாதரசி அவர். செட்டிநாட்டு அரச குடும்பத்துக்கு தேர்போகி நாட்டுக்குள் விவசாய நிலங்கள் உண்டு. அதனால் குப்புசாமி சேர்வையை அரச குடும்பத்தினர் அனைவரும் நன்கு அறிவர்.

வேறு வழியின்றி ஆச்சியின் சொல்லை தட்டாமல் ஒப்புக்கொண்ட சேர்வை, முழுவீச்சில் தம் குடும்பத்தினரை, உறவினர்களை தேர்தல் களத்தில் இறக்கினார். சாதிக்கார்களையும் உறவுகளையும் பகைத்துக்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்காக தேர்தல் பணியாற்றினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர் சிதம்பரம் மெக்க போன் மைக்குடன் பிரச்சாரம் செய்வார். அண்டக்குடி முத்துராமன் சின்ன சவுண்ட் பாக்ஸ் உடன் செல்வார். பின்னால் ஒருவர் நோட்டீஸை விநியோகம் செய்து கொண்டே செல்வார். காரைக்குடி (பழைய) பேருந்து நிலையத்தின் நடுவில் அப்போதிருந்த பூங்காவுக்குள் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, தலைவர் சிதம்பரமும் அண்ணன் முத்துராமனும் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மத்தியில் பிரச்சாரம் செய்ததை, அந்தக் காலத்து காங்கிரஸ் தலைகள் இப்போதும் நினைவுகூருகிறார்கள்.

முத்துராமன்
முத்துராமன்

அப்படியெல்லாம் வேலை பார்த்தும், அந்தத் தேர்தலில் 230 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பொ.காளியப்பனே வெற்றிபெற்றார். அதிமுக ஆட்சி அமைத்தது. தேர்தலில் தோற்ற கோபத்தில் பெட்டியைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ரயிலேறிவிட்டார் ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அவருக்காக தேர்தல் பணி செய்த அண்டக்குடி சேர்வை குடும்பம் இங்கே படாதபாடு பட்டது. காங்கிரஸ் வேட்பாளருக்கு தேர்தல் பணி செய்ததற்கு பரிசாக, சேர்வையின் 2-வது மகன் வேளாண் துறையில் பணியாற்றிய சண்முகசுந்தரம் ( பின்னாளில் வேளாண் துறையில் உயர் பதவிகள் வகித்தார்) சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையிலிருந்து ஆடுதுறைக்கு மாற்றப்பட்டார். தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய சேர்வையின் மூத்த மகன் பாண்டித்துரை, ஏற்காடுக்கு தூக்கி அடிக்கப்பட்டார். பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய அடுத்த மகன் சின்னத்தம்பி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 4-வது பிள்ளை முத்துராமன், தனது ‘ஏ கிளாஸ் கான்ட்ராக்ட்’ உரிமத்தை இழந்தார். அதைவிடக் கொடுமை, அவர் பார்த்து முடித்த ஒப்பந்த வேலைகளுக்கு உரிய பில்கள் ஒட்டுமொத்தமாக நிறுத்திவைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார்.

அண்டக்குடி சேர்வை குடும்பத்தினர்
அண்டக்குடி சேர்வை குடும்பத்தினர்

இதனால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், அந்தக் குடும்பம் திசை தெரியாமல் தடுமாறியது. முத்துராமன் தனது 38 வயதிலேயே மறைந்தும் போனார். பின்னர், அன்றைய மத்திய அமைச்சரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா ஆர்.வி.சாமிநாதன் அவர்கள் தலையிட்டு, அந்த பாக்கிப் பணத்தை முத்துராமனுக்குப் பெற்றுத் தந்தார்.

பெருமளவில் பாதிக்கப்பட்டாலும் அண்டக்குடி சேர்வை குடும்பத்தின் 3-ம் தலைமுறையில், சிலர் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் தலைவர் சிதம்பரத்துக்கு முத்துராமன் கிடைத்ததைப் போல, அண்ணன் முத்துராமனின் மகன் கதிரவன் கார்த்தி சிதம்பரத்துக்கு தோள் கொடுத்தார். அரசியல் சதுரங்கத்தில் தம்பி கதிரவன் இன்று தள்ளிவிடப் பட்டுள்ளார். ஆனாலும் அந்தக் குடும்பம் காங்கிரஸ் சிந்தனையுடன் இன்னமும் பயணிக்கிறது.

(அடுத்தவர்... குடியரசுத் தலைவர் பதவிக்கு அன்னை இந்திராவால் பரிசீலிக்கப்பட்டவர்)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

பிரச்சாரத்தில் ப.சிதம்பரம்...
சிவகங்கையும் சிதம்பரமும்... 4

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in