சிவகங்கை அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள வருங்கால பிரதமர் எடப்பாடி பழனிசாமி என்ற போஸ்டர் பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஆண்டு தோறும் அக்டோபர் 29, 30,31 ஆகிய மூன்று தேதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையும், தேவர் ஜெயந்தி விழாவும் நடைபெறும். இந்த விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தோர் வருவார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும், ஓபிஎஸ் ஓரம்கட்டப்பட்ட பிறகும் தென்மாவட்டங்களில் அதிமுகவிற்கான வரவேற்பு குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு அச்சமுதாய மக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விதம் விதமான போஸ்டர்கள் அச்சடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர். திருபுவனம் பகுதி அதிமுகவினர் வருங்கால பிரதமர் எடப்படி பழனிசாமி என்று போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
அதேபோல், காளையார்கோயிலில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டரில் குள்ள நரி கூட்டம், லெட்டர் பேடு அமைப்புகள் என குறிப்பட்டுள்ளார். மேலும் சேலத்து சிங்கம் எடப்பாடி எதற்கும் அஞ்சுவதில்லை என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கள்ளர், மறவர், அகமுடையார் எனப்படும் முக்குலத்தோரில் ஒரு பிரிவைச் சேர்ந்த மணி மாறன் ஒட்டியுள்ள போஸ்டரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.