சிவகங்கையும் சிதம்பரமும்... 8

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... 8

1980 நாடாளுமன்றத் தேர்தலில் ஐயா ஆர்.வி.சுவாமிநாதனை வீழ்த்த, ப.சிதம்பரத்தைக் கையில் எடுத்தார் ஒன்றுபட்ட ராமநாதபுரம் (முகவை) மாவட்ட தலைவர் உ.சுப்பிரமணியம். ஆனால், களநிலவரம் வேறுமாதிரியாக இருந்ததாலோ என்னவோ அவரே தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

கட்சியின் பக்கம் நின்ற உ.சுப

“தனி மனிதன் பெரிதா கட்சி பெரிதா என்றால்... கட்சிதான் பெரிது. எனவே, தேர்தலில் போட்டியிடுவது என்ற உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் சிதம்பரம். இன்றைக்கு உங்களைப் போட்டியிடச் சொல்லி உந்துபவர்கள் யாரும் நாளைக்கு உங்களோடு நிற்க மாட்டார்கள். கைதட்டுகிறவர்கள் எல்லாம் நம்மோடு இருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் காணாமல் போய்விடுவீர்கள். இந்த நிமிடம்வரை உங்களுக்கு ஆதரவாக நிற்கும் நானும் கட்சியா தனிமனித விசுவாசமா என்று பார்த்தால், கட்சியின் பக்கம்தான் நிற்பேன்” என்றார் உ.சுப்பிரமணியம்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், என்னெவெல்லாமோ எதிர்பார்த்து வந்த தலைவர் சிதம்பரத்துக்கு அறிவுரையும் ஆறுதலும் சொல்லும் நிகழ்வாக அன்றைய மாவட்டக் கமிட்டிக் கூட்டம் அமைந்து போனது.

உ.சுப்பிரமணியம்
உ.சுப்பிரமணியம்

‘முயற்சி செய்தோம்; முடியவில்லை. கட்சிக்கு விசுவாசமாக வேலை செய்வோம்‘ என்ற யதார்த்த மனிதர் பெரியவர் உ.சுப. இத்தனைக்கும் அவருக்கு ஆர்.வி.எஸ் சித்தப்பா உறவு முறை. ஆனாலும் அன்றைய காலகட்டத்திலேயே 17 வாகனங்களில் மதுரைக்கு (அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரையில் இருந்தது) சிதம்பரத்தை அழைத்துச் சென்று, அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும்வரை கூடவே இருந்த உ.சுப, கடைசியில் கட்சியின் பக்கமே நின்றார்.

கலங்கிய சிதம்பரம்

தலைமை அறிவித்த வேட்பாளரை ஏற்றுக்கொண்டு, சிதம்பரத்தை வேட்புமனுவை வாபஸ் பெறவைக்க மாவட்ட காங்கிரஸ் ஒரு குழுவை அவருடன் மதுரைக்கு அனுப்புகிறது. வாபஸ் வாங்கும் நேரம் முடிய 15 நிமிடங்கள் இருக்கும் நிலையிலும் தலைவர் சிதம்பரத்துக்கு வாபஸ் வாங்க மனம் வரவில்லை. ஒருவழியாக வாபஸ் வாங்கிவிட்டு வெளியே வந்தபோது, எதிர்பார்த்தது நடக்காமல் போனதே என்ற வருத்தம் தலைவருக்கு. அந்த ஆதங்கமும் ஆற்றாமையும் கண்ணீராய் பொங்குகிறது. யாராக இருந்தாலும் அதுதானே நடக்கும். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க, அந்த சமயத்தில் தனது கூலிங்கிளாஸை எடுத்து மாட்டிக் கொண்டதாக அருகிலிருந்து பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ராஜீவ் காந்தியுடன் உ.சுப
ராஜீவ் காந்தியுடன் உ.சுப

தேர்தல் அரசியலில் அன்றைக்கு தனக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டாலும், அதையே தனக்கான அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த தருணத்துக்காக காத்திருந்தார் சிதம்பரம். அந்தத் தருணங்கள் அதுவாகவே அமைந்து அடுத்தடுத்தும் வெற்றிப்படிகளை வேகமாக கடந்தார். சீமான் வீட்டுப் பிள்ளை இந்த அளவுக்கு அனைத்திலும் சிகரம் தொடுவார் என செட்டிநாட்டு செயல்வீரர்கள் யாரும் அப்போது நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. காங்கிரஸில் சிவகங்கை என்றால் சிதம்பரம் என்றே அடையாளமாகிப் போனது.

பெரியவர் உ.சுப்பிரமணியம் பாகனேரியைச் சேர்ந்தவர். வாளுக்கு வேலி பரம்பரையில் வந்தவர். இவரது தகப்பனார் உடையப்பா ஒன்றுபட்ட இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்தவர். 1970-1976 காலகட்டத்தில் காளையார்கோவில் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தார் உ.சுப. 1977, 1980 மற்றும் 1984 தேர்தல்களில் தொடர்சியாக சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினராகவும் 1984-ல் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.

எம்ஜிஆருடன் உ.சுப
எம்ஜிஆருடன் உ.சுப

சிவகங்கை எம்எல்ஏ-வாக இருந்தபோது, சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த இக்பால் அண்ணன் கடையில் உ.சுப சாமானியர் கணக்காய் உட்கார்ந்திருப்பார். அந்தக் கடைதான் அவருக்கு எம் எல்ஏ ஆபீஸ் மாதிரி. யார் என்ன உதவி கேட்டாலும் அங்கேயே கடிதம் எழுதிக் கொடுப்பார். மாலை வரை அங்கு இருந்துவிட்டு அதன் பிறகு, பாகனேரி போகும் கடைசி பஸ்ஸில் ஏறி ஊருக்குப் போவார்.

கொள்கைக்காக...

சென்னையிலிருந்த அவரது வீட்டுக்கு ஒருமுறை தொகுதிவாசிகள் 10 பேர் வேனில் வந்தார்கள். அப்படி வந்தவர்களுக்கு காபி உபசரணை செய்துவிட்டு, சமையல்காரர் நாராயணனை அழைத்து, “இவங்களுக்கும் சேர்த்து காலை பலகாரம் ரெடி பண்ணு” என்கிறார் உ.சுப. அதன் பிறகுதான் வந்தவர்களில் ஒருவரைக் கூப்பிட்டு, “என்ன விஷயம்... வேனெல்லாம் எடுத்து வந்திருக்கீங்க?” என்று விசாரிக்கிறார்.

அதற்கு, பயந்தபடியே அந்த கிராமத்து நபர் சொன்னார். "சாராயக்கடை ஏலம் வருது. ஏலம் வெளியார்கிட்ட போகாம நீங்க தான் ஊர் பொதுவுக்கு எடுத்து தரணும். அதுக்குத்தான் வந்தோம்" என்றார். இதைக் கேட்டதும் சமையல்கட்டை பார்த்துக் குரல் கொடுத்தார் ஐயா உ.சுப. “நாராயணா... இவுக டிபன் சாப்பிடலை; உடனே ஊருக்குப் போறாக. நீ நமக்கு மட்டும் பண்ணு."

வந்தவர்கள் உ.சுப-வை உளமாற திட்டிக்கொண்டே போனார்கள். இலங்கையில் மிகப் பெரிய அளவில் கள்ளுக்கடை நடத்தியவர்கள் உ.சுப குடும்பத்தினர். காங்கிரஸ், காந்திய வழி என்று வந்த பின், ஒட்டுமொத்தமாக அந்தத் தொழிலையே நிறுத்தியவர்கள்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இப்படித்தான் ஒரு சமயம், குதிரைப் பந்தயம் நடத்த அனுமதி கேட்டு தொழிலதிபர்கள் சிலர் முதலமைச்சர் எம்ஜிஆரைச் சந்தித்தார்கள். “இதற்கெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் ஒப்புக்கொள்ள மாட்டார்; முதலில் நீங்கள் அவரை சமாதானம் செய்துவிட்டு வாருங்கள். அவர் ஒப்புக்கொண்டால் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினார் முதல்வர்.

ஒரு கோடி ரூபாயை மடியில் கட்டிக்கொண்டு பாகனேரிக்கு வந்தார்கள், குதிரைப் பந்தயப் பிரியர்கள். வந்தவர்களை உட்காரச் சொல்லி காபி கொடுத்து உபசரித்தார். வந்தவர்கள் காபியை உதடு சுடாமல் குடித்துக்கொண்டே உள்ளக் கிடக்கையைச் சொன்னார்கள். அவ்வளவுதான்... “மக்களைப் பாதிக்கிற சூதாட்டம் இது. என் கட்சிக் கொள்கைக்கு விரோதமான இந்தக் காரியத்துக்கு நான் ஒருக்காலும் உடன்பட மாட்டேன். நீங்க போயிட்டு வாங்க” என்று வந்தவர்களை தலைக்கு மேலே கும்பிடுபோட்டு, வழியனுப்பி வைத்தார் உ.சுப.

சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் அவரின் அறை எண் 228. அப்போதைய கதர்ச் சட்டைக்காரர்களுக்கு அதுதான் சரணாலயம். பெரியவர் கரியமாணிக்கம் அம்பலம், நடிகர் கமல்ஹாசனின் தந்தையார் சீனிவாசன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பழனியாண்டி, கமுதி பி.கே கிருஷ்ணன், கே.ஒ. இராமசாமி என பலரும் கூடிவிவாதிக்கும் கூட்ட அரங்காகவே இருந்தது அந்த அறை.

பாகனேரி அரசியல் முடிஞ்சுது சார்...

‘தேர்தலில் சீட் இல்லை‘ என்றதும் கோபமாக சென்னை சென்ற தலைவர் சிதம்பரம், வழக்கறிஞர் தொழிலை பார்த்தார். அப்போது மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மானாமதுரை சுதந்திரபாண்டியன், உ.சுப-வின் மகன் சுப.உடையப்பன் ஆகியோர் சிதம்பரத்தை இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் பேச தேவகோட்டைக்கு அழைத்து வந்தனர். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் உ.சுப சிவகங்கை எம்.பி சீட்டைக் கேட்டார். அது ராஜீவ்காந்தி வந்திருந்த நேரம் என்பதால், அவருடன் தன்னை நெருக்கப்படுத்திக் கொண்ட சிதம்பரமும் சிவகங்கைக்கு போட்டிக்கு வந்தார். இருவருமே ஐயா மூப்பனாருக்கு நெருக்கமானவர்கள். மூப்பனார் தலைவர் சிதம்பரத்தை எம்.பி-யாக டெல்லிக்கும் உ.சுப-வை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆக்கி பிரச்சினையை முடித்தார்.

ஆனாலும், உ.சுப எம்.பி சீட் கேட்டது தலைவர் சிதம்பரத்தின் மனதில் உறுத்தலாகவே இருந்தது. அதுவே, இருவரது உறவில் விரிசல் விழவும் காரணமானது. சிவகங்கை காங்கிரஸ் அரசியல் சுமார் 25 ஆண்டுகாலம் பாகனேரியை அச்சாணியாக வைத்தே சுழன்றது. அப்படியிருக்க, “பாகனேரி அரசியல் முடிஞ்சுது சார்...” என்று ஒரு தலைவர் சொன்னார்.

(அது யார் தெரியுமா?)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 8
சிவகங்கையும் சிதம்பரமும்... 7

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in