சிவகங்கையும் சிதம்பரமும்... 7

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... 7

கதிகலங்கிய ராமாவரம்!

காங்கிரஸ் தலைமையின் அழைப்புகளை வேண்டுமென்றே நிராகரிக்கிறார் எம்ஜிஆர் என்றதும் கொஞ்சம் வேகப்பட்டுவிட்டார் ஐயா ஆர்.வி.எஸ். அந்த வேகத்துடன் ராமாவரம் தோட்டம் விரைந்தார். போலீஸ் பாதுகாப்பு, எம்ஜிஆரின் சிப்பாய்கள் உள்ளிட்ட அனைவரையும் மிரள வைத்து எம்ஜிஆருக்கு எதிரில் போய் உட்கார்ந்தார். “எத்தப் பெரிய குடும்பம்... அவுகளுக்கு நீங்கள் இப்படி செய்யலாமா... மத்திய அரசுக்கு அடிபணியலாமா?” என்று தனக்கிருந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்டார் ஆர்.வி.எஸ். அவரைப்போல எத்தனையோ ஜாம்பவான்களைப் பார்த்தவராயிற்றே எம்ஜிஆர்... அதனால் தன் பங்குக்கு மறுத்து சில வார்த்தைகளைச் சொன்னார். ராமாவரம் தோட்டத்தை எத்தனையோ பேருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இடம் என்று சொல்வார்கள். ஆனால் அன்று, ஆர்.வி.எஸ்ஸின் ஆவேசத்தைப் பார்த்து தோட்டமே சற்று ஆடிப் போனதாகச் சொல்வார்கள்.

இந்திரா காந்தி, எம்ஜிஆர் ஆகியோருடன் ஆர்.வி.எஸ்
இந்திரா காந்தி, எம்ஜிஆர் ஆகியோருடன் ஆர்.வி.எஸ்

அன்னை இந்திரா, தஞ்சையில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டதற்கு எம்ஜிஆரின் முரண்டும் ஒரு காரணம் என்பார்கள். கடைசியாக, தஞ்சை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவடிவேலு வெற்றி பெற்றார். நேரு குடும்பத்தின் முரட்டு விசுவாசியான ஆர்.வி.எஸ்ஸை, இந்திரா காந்தி 1982-ல் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த திட்டம் வகுத்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த எண்ணம் ஈடேறாமல் போனது.

2 முறை எம்எல்ஏ, 3 முறை எம்பி, ஒருமுறை மத்திய அமைச்சர், ஒருமுறை தமிழக காங்கிரஸ் தலைவர் என பொறுப்புகளில் கோலோச்சியவர் ஐயா ஆர்.வி.எஸ். இவர், சிவகங்கை எம்பி-யாக இருந்தபோதுதான் சிவகங்கை தனி மாவட்டமானது. அதற்காக எம்ஜிஆரிடம் பேசி இவர் எடுத்த முயற்சிகள் ஏராளம்.

தேவருக்கு பென்ஷன்

ஒருமுறை தனது சுற்றுப்பயணத்தின்போது, சுதந்திரப் போராட்ட தியாகி பூலாங்குறிச்சி சுப்பையா தேவரை எதார்த்தமாகச் சந்தித்தார் ஆர்.வி.எஸ். பழைய நினைவுகளில் மூழ்கி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, “தேவரே... உங்களுக்கு தியாகி பென்ஷன் வருகிறதா?” என்று கேட்டார் ஆர்.வி.எஸ். அதற்கு, “நான் உங்களோட ஜெயிலுக்கு வரலியே... போராட்டத்துல இருந்த உங்களுக்கு சாப்பாடு குடுத்து கூடமாட ஒத்தாசையா இருந்தேன். ஜெயிலுக்குப் போயிருந்தா தான் பெஞ்சின் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. அதனால எனக்குக் கிடைக்கல” என்றார் தேவர்.

ஆர்.வி.எஸ்.
ஆர்.வி.எஸ்.

இதைக் கேட்டுக்கொண்டு டெல்லிக்குப் போன ஆர்.வி.எஸ், பிரதமர் இந்திராவைச் சந்தித்து இது விஷயமாகப் பேசினார். ‘சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்து சிறை செல்லாதவர்களும் பென்ஷன் பெறலாம். 5 ஆண்டுகள் சிறையில் இருந்த தியாகி ஒருவர் சான்றளித்தால் மட்டும் போதுமானது’ என்று மத்திய அரசு உத்தரவிட்டது அதற்குப் பிறகுதான். இந்த உத்தரவால் இன்றைக்கும் பல தியாகிகளின் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.

கடன்பட்டாலும் கரையாத கண்ணியம்...

உயர்ந்த பொறுப்புகளில் இருந்தாலும், முறைகேடாகப் பொருளீட்டும் எண்ணம் துளியும் இல்லாது இருந்தார் ஆர்.வி.எஸ். அவர், மத்திய வேளாண் அமைச்சராக இருந்தபோது கப்பல் போக்குவரத்துத் துறையையும் கூடுதலாக கவனித்தார். அந்த சமயத்தில் வட இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது ஏற்றுமதி நிறுவனத்துக்கு தடையின்மைச் சான்று பெறுவதற்காக ஆர்.வி.எஸ்ஸை தேடி வந்தார். குறுக்குவழியில் போனால்தான் அந்தச் சான்றை அளிக்க முடியும் என்பதால், அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் ஆர்.வி.எஸ். அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டு வந்திருந்த அந்தத் தொழிலதிபர், “நீங்கள் 50 லட்ச ரூபாய் கடனில் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். இதை நீங்கள் செய்துகொடுத்தால் அந்தக் கடனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார். “நான் கடனாளியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்... நீங்கள் கிளம்பலாம்” என்று சொல்லி, கைகூப்பி அவரை வழியனுப்பி வைத்தார் ஆர்.வி.எஸ். அசராத அந்தத் தொழிலதிபர் மறுநாளும் வந்தார். “மன்னிக்கணும்... நீங்கள் எத்தனை முறை என் வீட்டுக்கு வந்தாலும் என் பதில் இதுதான்” என்று சொல்லி அனுப்பினார் ஆர்.வி.எஸ்.

ஆர்.வெங்கட்ராமனுடன் ஆர்.வி.எஸ்
ஆர்.வெங்கட்ராமனுடன் ஆர்.வி.எஸ்

ஆர்.வி.எஸ். மறையும் வரை அந்த 50 லட்ச ரூபாய் கடன் அப்படியே இருந்தது. அவர் மறைந்த பிறகு, மதுரை சொக்கிகுளம் ஹக்கீம் அஜ்மல் கான் தெருவிலிருந்த அவரது வீட்டை விற்று அந்தக் கடனை அடைத்தனர் குடும்பத்தினர்.

அன்றைக்கு இருந்த தலைவர்கள், அரசியலை இப்படித்தான் அப்பழுக்குச் சொல்லமுடியாத தவ வாழ்க்கையாக வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல் தலைவர்கள் பணம் கிடைக்கிறது என்றால், சாக்கடையின் பாதாளத்துக்கும் போய் தேட ஆரம்பித்து விடுகின்றனர்.

எம்ஜிஆரும் கலைஞர் கருணாநிதியும் எதிரெதிர் துருவங்களாக அரசியல் நடத்திய போதும், ஆர்.வி.எஸ். வீட்டு திருமணத்தில் ஒரே சமயத்தில் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பது இவரின் அரசியல் முக்கியத்துவத்துக்கு அடையாளம். ஆர்.வி.எஸ். மகன் அண்ணன் இராஜமார்த்தாண்டனை பெருந்தலைவர் காமராஜர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர் என பல பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்தார். மற்றொரு பிள்ளை பிரேம்குமார் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

யார் காரணம்..?

அண்ணன் இராஜமார்த்தாண்டனின் புதல்வர் சுவாமிநாதன், தலைவர் சிதம்பரத்தை தவிர்த்துவிட்டு வாழப்பாடியாரின் தளபதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இப்போது பாஜகவில் முக்கிய பிரமுகராக இருக்கிறார். இவரின் மகன் பொறியாளர் இராஜமார்த்தாண்டன் (ஆர்.வி.எஸ்ஸின் கொள்ளுப் பேரன்). தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலில், 2010-ல் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடந்தபோது என்னை அணுகினார்.

அப்போது நான் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை இளைஞர் காங்கிரஸில் இணைத்தோம். அவரை சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக களமிறக்க நினைத்தேன். உறுப்பினர் பட்டியல் வெளியானபோதுதான் பார்த்தேன்; அதிர்ந்தேன். தம்பி இராஜமார்த்தாண்டனின் பெயர் பட்டியலில் விடுபட்டிருந்தது. ஆள்பலமிக்கவர்கள் புத்திசாலிகள். அவர்களை மீறி இங்கே அரசியல் செய்ய இயலாது என்ற அடிப்படை விதி அப்போது எனக்கு தெரியவில்லை.

ஆர்.வி.எஸ்ஸின் மகள்வழிப் பேரன் நகரம்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக 3-வது முறையாக வென்று, இன்றும் ஒரு காந்தியவாதியாகவே வலம் வருகிறார். இன்றைக்கும் வெறும் பத்தாயிரம் ரூபாய் செலவில் ஒரு பஞ்சாயத்து தலைவர் வெற்றி பெறுகிறார் எனில், அவரின் மக்கள் சேவையை தெரிந்து கொள்ளலாம். அவர் மட்டுமே ஐயாவின் வாரிசாக காங்கிரஸில் நீடிக்கிறார். காங்கிரஸில் டெல்லி வரைக்கும் செல்வாக்காய் இருந்த இந்தக் குடும்பம், இன்றைக்கு அரசியலில் அடையாளம் தெரியாமல் இருக்க யார் காரணம்?

(அடுத்து, சிதம்பரத்துக்கு அனுசரணையாக இருந்து ஆர்.வி.எஸ்ஸை எதிர்த்தவரின் அரசியல் சரித்திரம்)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 7
சிவகங்கையும் சிதம்பரமும்... : 6

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in