சிவகங்கையும் சிதம்பரமும்... : 6

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... : 6

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் எப்போதுமே டெல்லி காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ, என்ன நினைக்கிறதோ அதை அப்படியே பிரதிபலிக்கும். தகவல் தொடர்பு வசதிகள் பெருகிவிட்ட இன்றைக்கும் சரி, வசதிகள் குறைவாக இருந்த அந்தக் காலகட்டத்திலும் சரி. இதுதான் நிலை.

1980 தேர்தலில் சிவங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு, ஐயா ஆர்.வி.சுவாமிநாதன் தான் வேட்பாளர் என அன்னை இந்திரா காந்தி அறிவித்து, அவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். இருந்தாலும், கடைசி நிமிடம் வரை வேட்பாளரை மாற்றம் செய்துவிட முடியும் என தலைவர் ப.சிதம்பரம் உறுதியாக நம்பினார். காரணம், ஐயா ஆர்.வி.எஸ் அதற்கு முந்தைய (1977) தேர்தலில் மதுரை தொகுதியில் நின்று எம்பி-யாக வெற்றி பெற்றிருந்தார். அதைச் சொல்லி எதிர்ப்புக் காட்டினால், அவரை மதுரைக்கே திருப்பிவிடலாம் என நினைத்தார்கள்.

ஆர்.வி.சுவாமிநாதன்
ஆர்.வி.சுவாமிநாதன்

அப்போது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த உ.சுப்பிரமணியம், ப.சிதம்பரத்தை சிவகங்கையில் நிறுத்த தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். அதனால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தைக் கூட்டி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால், டெல்லி தலைமை யோசிக்கும் என கணக்குப் போட்டார் தலைவர் சிதம்பரம். அதன்படியே மாவட்ட தலைவரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்டவும் வைத்தார்.

அதற்கு முன்பாகவே சிவகங்கைச் சுவர்களில், ‘செந்தமிழ் செல்வன் ப.சிதம்பரத்துக்கு வாக்களியுங்கள்...’ ‘சொல்லின் செல்வர் ப.சிதம்பரத்துக்கு வாக்களியுங்கள்...’ என்றெல்லாம் தேர்தல் விளம்பரங்களை தெறிக்கவிட்டாயிற்று. பரபரப்பான சூழ்நிலையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் எல்லாம் ஒரு முடிவு செய்திருக்க, சிவகங்கையில் அச்சகம் நடத்திய சஞ்சய் கணபதி தலைமையிலான இளைஞர்கள் வேறு மாதிரி முடிவு செய்திருந்தனர்.

கூட்டம் தொடங்கியதுமே எழுந்த சிவகங்கை தாலுகா காங்கிரஸ் தலைவர் தமறாக்கி முத்துராமலிங்கம், “அகில இந்திய காங்கிரஸ் தலைமை பல்வேறு இடர்ப்பாடுகளுடன் தேர்தலைச் சந்திக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் ஒரே இலக்காக இருக்க வேண்டும். ஆகவே கட்சி அறிவித்த வேட்பாளரை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அவரை வெற்றி பெறச்செய்வோம்” என்றார்.

காமராஜருடன் ஆர்.வி.எஸ்.
காமராஜருடன் ஆர்.வி.எஸ்.

அடுத்து சற்றும் தாமதிக்காமல் எழுந்த காளையார்கோவில் காங்கிரஸ் தலைவர் ஆட்டுக்காலி மைக்கேல், “இதனை நான் வழிமொழிகிறேன்” என்றார். அடுத்தடுத்து கூட்டத்திலிருந்த மானாகுடி ராசு, கண்ணாரிருப்பு ராமன், டி.எஸ்.முத்து உள்ளிட்டோரும் பெருங்குரலெடுத்து, “நாங்களும் இதனை வழிமொழிகிறோம்” என்றனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தலைவர் சிதம்பரம் நொறுங்கிப் போனார்.

காங்கிரஸ் தொண்டர்களின் ஏகோபித்த கருத்து இப்படி இருந்தால், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியால் என்ன செய்யமுடியும்? ஐயா ஆர்.வி.எஸ் சிவகங்கையில் நின்றார்; வென்றார். அவரை மத்திய வேளாண் அமைச்சராகவும் ஆக்கினார் அன்னை இந்திரா.

ஆர்.வி.எஸ் மத்திய அமைச்சராக இருந்தவரைக்கும் தலைவர் சிதம்பரம் அரசியல் பயணமாக அதிகம் சிவகங்கை பக்கம் வரவில்லை. ஒருமுறை சிராவயலில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவுக்கும், மற்றொரு முறை தேவகோட்டையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்துகொண்டு பேசினார்.

நேருவுடன் ஆர்.வி.எஸ்.
நேருவுடன் ஆர்.வி.எஸ்.

ஆர்.வி.எஸ். பாகனேரியைச் சேர்ந்தவர். மூதாதையர் ஞானி எனும் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவரும் அரசியல் ஞானியாகவே திகழ்ந்தார். மக்களின் மனம் அறிந்த ஞானியாகவே வாழ்ந்தார். ஆர்.வி.எஸ். குடும்பம் நடுத்தர விவசாயக் குடும்பம். தனது 19-வது வயதில் சுதந்திர போராட்டக் களத்தில் நின்றவர் ஆர்.வி.எஸ். இராமநாதபுரம் ஜில்லாவின் முதல் சத்தியாகிரக போராளி இவரே. தேச விடுதலைக்காகப் பலமுறை சிறை சென்றவர். ஒருமுறை, கொடி ஏற்ற முயன்றபோது ஆங்கிலேய போலீஸார் துப்பாக்கியைக் காட்டி, “சுட்டு விடுவோம்” என்றனர். அப்போது தயங்காமல் சட்டையைக் கழற்றி, “சுடு பார்க்கலாம்” என்று சொன்ன மாவீரன் ஐயா ஆர்.வி.எஸ். சிறையில் இருக்கும்போது காவலர் தாக்குதலில் காலில் ஏற்பட்ட காயம் கடைசி காலம்வரை ஐயாவின் காலில் வடுவாக இருந்தது.

முக்குலத்தோரின் கள்ளர் சமூகத்தில் பிறந்திருந்தாலும் காந்தியவாதியான ஆர்.வி.எஸ், தீண்டாமையை ஒழிக்கப் போராடியவர். பாகனேரியில் தம் வீட்டை பட்டியலினத்தவரின் குடியிருப்பு அருகிலேயே கட்டியிருக்கிறார் என்பது இவரது சிறப்பு. மகாத்மா காந்தி 2 முறை ஐயா ஆர்.வி.எஸ் வீட்டுக்கு வந்து தங்கி இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

ஆங்கிலேயர் ஆட்சி, 89 சாதிகளை குற்றப் பரம்பரை என வைத்திருந்தது. அந்த குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் முழங்கி அந்தச் சட்டத்தை உடைத்து எறிந்தவர் ஆர்.வி.எஸ்.

1963-ல், ‘கே பிளான்’ திட்டப்படி தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் காமராஜர். அதன்பிறகு முதலமைச்சரை தேர்வு செய்ய நடைபெற்ற எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், பெரியவர் பக்தவத்சலமும் ஐயா ஆர்.வி.எஸ்ஸும் மோதினார்கள். பெருந்தலைவர் காமராஜரின் ஆதரவைப் பெற்ற பக்தவத்சலம் முதலமைச்சர் ஆனார். அந்த சமயம் கடைசிவரை பெருந்தலைவர் காமராஜருடைய சாய்ஸ் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் காட்டுப்பட்டி இராமையா தான். கடைசியில்தான் பக்தவத்சலம் என்று மாறியது.

எம்ஜிஆருடன் ஆர்.வி.எஸ்.
எம்ஜிஆருடன் ஆர்.வி.எஸ்.

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால்... பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கையைப் பெற்ற பெரியவர் காட்டுப்பட்டி இராமையா, ஐயா ஆர்.வி.எஸ், காமராஜரை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கம்பனடிப்பொடி சா.கணேசன் என எல்லோருமே சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸில் தக்கவைத்திருக்க வேண்டிய இந்த 3 குடும்பங்களும் இப்போது தள்ளியே இருக்கிறார்கள்.

ஜவஹர்லால் நேருவுடனும் அன்னை இந்திரா காந்தியுடனும் நெருக்கமான நட்புடன் இருந்தார் ஆர்.வி.எஸ். சஞ்சய் காந்தி திருமணத்தின்போது சாட்சிக் கையெழுத்து போட்டவர் ஆர்.வி.எஸ். நேரு குடும்பத்தின் மீது அசைக்க முடியாத விசுவாசம் கொண்டிருந்தார்.

மதுரையில் அன்னை இந்திரா காந்தி தாக்கப்பட்ட போது, அவர் கல்வீச்சில் காயம்படாமல் அரணாய் நின்று பத்திரமாக பாதுகாத்தது ஐயா ஆர்.வி.எஸ், பழ.நெடுமாறன் மற்றும் சித்தையன்கோட்டை அப்துல் காதர் உள்ளிட்ட மூவர் தான்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

1979-ல் தஞ்சாவூர் தொகுதி பாராளுமன்ற இடைத் தேர்தல். அன்னை இந்திரா காந்தியைப் போட்டியிடச் சொல்லிக் கேட்டார் ஆர்.வி.எஸ். அன்னையும் ஒப்புக்கொண்டு தமிழக முதல்வர் எம்ஜிஆரிடமும் முதல் சுற்று பேசியாயிற்று. ஆனால், பிரதமர் மொரார்ஜி தேசாய் அலுவலகத்திலிருந்து அன்னை இந்திராவை வேட்பாளராக ஒப்புக்கொள்ளக் கூடாதென தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு கடுமையான அழுத்தம். இதனால் காங்கிரஸ் தரப்புடன் பேசவே மறுக்கிறார் எம்ஜிஆர்.

(அப்புறம் என்ன நடந்தது?)

முத்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... : 6
சிவகங்கையும் சிதம்பரமும்... 5

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in