சிவகங்கையும் சிதம்பரமும்... 23

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பலருக்கும் என்னுள் இருப்பதைப் போன்று ஏராளமான எண்ணக் குமுறல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவர்களால் சூழ்நிலை காரணமாகவோ வேறு சில காரணங்களாலோ வெளிப்படையாக பேசமுடியவில்லை. ஆனால், கட்சியின் ஆரோக்கியமான வளர்ச்சியை மட்டுமே சிந்திக்கும் எனக்கு அதுபோன்ற அச்சமோ, தயக்கமோ இல்லை. என்றாலும் காமதேனு மின்னிதழில் இந்தக் கட்டுரைத் தொடரை நான் எழுதத் தொடங்கும் போதே, கட்சிக்குள் இருந்து சிலர் எனக்கு எதிராகக் கலகம் செய்வார்கள், சிண்டு முடிவார்கள், இண்டு இடுக்கில் நின்றுகொண்டு சிந்து பாடுவார்கள் என்று எனக்குத் தெரியும்.

அப்படியான எதிர்ப்புகளை கடந்த சில வாரங்களாக நான் எதிர்கொண்டதும் உண்மை. ஆனால் ஆரம்பத்தில், பழனியப்பனை அரக்கன் என்றவர்களே இப்போது, “அவன் நியாயத்தைத்தான்யா எழுதுறான். உனக்கு ஏதாச்சும் குறை இருந்தா பழனியப்பன்கிட்ட போய் சொல்லு” என்று ஆள்பிடித்து அனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த அளவில், லேட்டானாலும் என்னைப் புரிந்துகொண்ட அந்த காங்கிரஸ் நண்பர்களுக்கு நன்றி.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

காங்கிரஸ் தரப்பில் மட்டுமல்ல... பொதுமக்கள் மத்தியிலும் இந்தக் கட்டுரைகளைப் படித்து விவாதிக்கிறார்கள் என்பதை கல்யாண வீடுகளுக்குப் போகும்போது தெரிகிறது. முகம் தெரியாதவர்கள் எல்லாம் என்னைத் தேடிவந்து கை குலுக்குகிறார்கள். இன்னும் பல காங்கிரஸ் நண்பர்கள், “அந்த ஆபீஸ்ல நடக்கிற கூத்துகளையும், உதவியாளர்கள் என்று சொல்லி உட்கார்ந்திருப்பவர்கள் நடத்தும் வசூல் வேட்டைகளையும் எழுதுங்க. வேணும்னா நாங்க எவிடென்ஸ் எடுத்துத் தர்றோம்” என்கிறார்கள்.

‘அரண்மனை கோழி முட்டைகள்’ காங்கிரஸ் தொண்டர்களை எப்படி எல்லாம் படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது, அவர்கள் புலம்புவதிலிருந்து தெரிகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் சரியான பாதையில் பயணக்கிறோம் என்பதை என்னால் உணரமுடிகிறது; இயன்றவரை இன்னும் எழுத வேண்டும் என்று என்னை உற்சாகப்படுத்துகிறது.

இனி இன்றைய தியாகி...

கவியரசர் கண்ணதாசனோடும் முன்னாள் முதல்வர் கலைஞருடனும் நெருக்கமாக இருந்தவர் கண்ணப்பா வள்ளியப்பா. மூவரும் ஒன்றாகப் பயணித்த காலங்களும் உண்டு என்பார்கள். காரைக்குடி அருகிலுள்ள கல்லல் சிறுநகரத்தைச் சேர்ந்த பெருவணிகக் குடும்பம். ஒரு காலத்தில் பஸ் ரூட்டுக்குச் சொந்தக்காரராக இருந்த பஸ் அதிபர். கவியரசுவின் ‘வனவாசத்தை’ ஆழ்ந்து படித்தவர்கள், அதில் கண்ணப்பா வள்ளியப்பா கேரக்டர் வந்துபோவதையும் கடந்திருக்க முடியும்.

கண்ணப்பா வள்ளியப்பாவின் ஆரம்ப அரசியல் திமுகவில் இருந்துதான் தொடங்கியது. காலப்போக்கில்தான், காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1963-ல், அறந்தாங்கியில் தொழில் நிறுவனங்கள் நடத்திய கண்ணப்பா வள்ளியப்பா, அந்த சமயத்தில் அறந்தாங்கி தாலுகா காங்கிரஸ் தலைவராக இருந்தார். 1965-ல், காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் பேரணி ஒன்றில் இவரது சொந்த செல்வாக்கைப் பார்த்த பெரியவர் உ.சுப்பிரமணியம், சீரங்கம் பிள்ளை, ஐயா ராமகிருஷ்ண தேவர் ஆகியோர், இவரை திருப்பத்தூர் தாலுகா காங்கிரஸ் தலைவராகக் கொண்டு வந்தார்கள்.

கண்ணப்பா வள்ளியப்பா
கண்ணப்பா வள்ளியப்பா

1970-ல், கல்லல் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த வள்ளியப்பா, 1971 பாராளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தா.கிருட்டிணனை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியையும் தவறவிட்டவர்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

1971 - 77 காலகட்டத்தில், கல்லல் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தவர் வள்ளியப்பா. அன்று, கல்லல் ஒன்றியத்தில் மட்டும் 22 பஞ்சாயத்து தலைவர்கள் காங்கிரஸ்காரர்கள். 10 பஞ்சாயத்துகளில் மட்டுமே திமுக தலைவர்கள். கட்சியை அப்படி உயிரோட்டமாக வைத்திருந்த நிஜப் போராளி வள்ளியப்பா. அவர் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தபோது, ரேஷன் பொருட்கள் விநியோக குளறுபடி பிரச்சினைகளுக்காக தேவகோட்டை சப் - கலெக்டர் அலுவலக வாசலில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினார். ஒவ்வொரு நாளும் ஒரு பஞ்சாயத்து தலைவர் தலைமை என 25 நாட்கள் தொடர்ந்த அந்தப் போராட்டம், கடைசியில் வெற்றியில் முடிந்தது. இன்றைக்கெல்லாம் இப்படியான போராட்டங்களை நடத்த காங்கிரஸில் யார் இருக்கிறார் சொல்லுங்கள்?

கல்லலில் 3 நாட்கள் தேசியத் திருவிழாவை காமராஜர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரை அழைத்து வந்து நடத்திய பெருமையும் கண்ணப்பா வள்ளியப்பாவுக்கு உண்டு. 1977 சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்குடி தொகுதியில் அன்புத் தலைவர் ப.சிதம்பரம் போட்டியிட்டார். அந்த சமயத்தில் கண்ணப்பா வள்ளியப்பாவின் தியாகமும் களப்பணியும் மதிக்கப்படவில்லை. இவரெல்லாம் ஒரு ஆளா என்றுகூட சிலர் நினைத்தார்கள். அதனால், வள்ளிய்யப்பாவை தேர்தல் பிரச்சாரத்துக்குகூட அழைக்கவில்லை.

இதையெல்லாம் சகித்துக்கொண்டு வள்ளியப்பா சும்மா இருக்கவில்லை. மெக்கபோன் மைக்கோடு, காங்கிரஸ் கொடியுடன் தனது சொந்த வாகனத்தில் அன்புத் தலைவர் சிதம்பரத்துக்கு எதிராக அதிரடிப் பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் தலைவர் சிதம்பரம் சுமார் 230 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேசமயம், கல்லல் பகுதியில் மற்ற பிரதான வேட்பாளர்களைவிட குறைவான வாக்குகளே தலைவர் சிதம்பரத்துக்கு பதிவானதற்கு, கண்ணப்பா வள்ளியப்பாவின் பிரச்சாரமும் ஒரு காரணம் என்பார்கள்.

அந்தத் தேர்தலுக்குப் பிறகு, தலைவர் சிதம்பரத்துடன் மல்லுக்கட்ட முடியாமல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார் கண்ணப்பா வள்ளியப்பா. தலைவரின் இன்சல்ட் பாலிடிக்ஸில் முதல் விக்கெட் கண்ணப்பா வள்ளியப்பா. பொதுவாகவே, எந்தக் கட்சியிலும் சொந்த சாதிக்காரன் வளர்வதை அவ்வளவு எளிதாக சகித்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கு அந்தக் காலத்து உதாரணம் கண்ணப்பா வள்ளியப்பா. இவரும் அன்புத் தலைவரின் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது, இங்கே கவனிக்கத்தக்கது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

காங்கிரஸில் இருந்தாலும் மேட்டுக்குடி அரசியல் நடத்தாமல், அடித்தட்டு மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர் கண்ணப்பா வள்ளியப்பா. அந்த மக்களின் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடவும் தயங்காதவர். இன்றைக்கு இருப்பவர்களைப் போல் இல்லாமல், சொந்தப் பணத்தைச் செலவுசெய்து கட்சியின் செல்வாக்குக் குலையாமல் பார்த்துக் கொண்டவர். அப்படிப்பட்டவரை நாம் உதாசீனப்படுத்தினோம். அருமை தெரிந்த திமுக அவரை தன்னகத்தே இழுத்துக் கொண்டது. கடைசி காலத்தில், திமுக கரைவேட்டியுடன் காலமானார் கண்ணப்பா வள்ளியப்பா.

(35 ஆண்டுகளாக, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பொறுப்பை தன்னகத்தே வைத்திருந்த பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் அது. அன்புத் தலைவர் சிதம்பரத்தின் மீது உயிரினும் மேலாக பாசம் வைத்திருந்தவர்கள். சிதம்பரமும் அந்தக் குடும்பத்தோடு அப்படித்தான் உறவு கொண்டாடினார். ஆனால், இன்று அந்தக் குடும்பம் காங்கிரஸில் இல்லை. ஏனென்று கேட்டால், “பொது இடத்துல மரியாதைக் குறைவா நடத்துறத நம்மாள சகிச்சுக்க முடியாது தம்பி” என்கிறார்கள். அவர்களை அப்படி மரியாதைக் குறைவாக நடத்தியது யார்? அடுத்து பார்ப்போம்!)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

ப.சிதம்பரம்
சிவகங்கையும் சிதம்பரமும்... 22

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in