சிவகங்கையும் சிதம்பரமும்... 22

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... 22

காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ராமசாமி அம்பலத்தின் அறைகுறையாய் இடிக்கப்பட்ட அந்த வீடு இன்னும் இருக்கிறது. வீடு இடிக்கப்பட்ட கதைக்கு, பின்னால் வருகிறேன். ராமசாமி அம்பலம் தீவிரமான காங்கிரஸ் பக்தர். காங்கிரஸ் தலைவர்களைக் கண்டால் அவருக்கு தலைகால் புரியாது. அப்படிப்பட்டவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பா.ராமச்சந்திரனையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்த ஜி.கே.மூப்பனாரையும் ஒன்றாக அழைத்து வந்து தன் வீட்டு வாசலிலேயே காங்கிரஸ் கொடியேற்று விழா ஒன்றை நடத்துகிறார்.

அப்போது அவரது மகன் மெய்யருக்கு 9 வயது. கலர் சட்டை போட்டுத் திரிந்த அந்தப் பொடியனுக்கும் அப்போது தும்பை நிறத்தில் தூய வெள்ளைச் சட்டையை மாட்டிவிடுகிறார் அம்பலம். “தலைவர்கள் வரும்போது வெள்ளைச்சட்டை தான் போட்டுக்கணும்டா மக்குப் பயலே” என்று மகன் மெய்யரிடம் சொல்கிறார். அப்பா அன்றைக்குப் போட்டுவிட்ட வெள்ளைச் சட்டையை இன்றைக்கும் மறக்கவில்லை மெய்யர். வெள்ளைக் கதராடையும் நெற்றி நிறைந்த திருநீறுமாக காங்கிரஸ் போராளியாக கம்பீரமாக வலம் வந்தவர் மெய்யர். இவரது அதிரடி அரசியலைப் பார்த்து அதிமுக, திமுக அன்பர்களே சற்று அரண்டு மிரண்டு நிற்பார்கள்.

1994-ல் அன்புத் தலைவர் ராஜீவ் காந்தியின் 50-வது பிறந்த நாள் விழாவை காரைக்குடியில் மிகப்பெரிய அளவில் நடத்துகிறார் மெய்யர். அப்போது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பெரியவர் கரியமாணிக்கம் அம்பலம்தான் விழாவை தலைமையேற்று நடத்துகிறார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அன்புத் தலைவர் சிதம்பரம். அவர் வந்த காருக்குள் கார்த்தி சிதம்பரமும் இருக்கிறார். கார்த்தியைப் பார்த்ததும் அவரையும் மேடைக்கு அழைக்கிறார் மெய்யர். ஆனால், தலைவர் சிதம்பரம் வேண்டாம் என மறுக்கிறார். ஆனாலும் கேட்காத மெய்யர், கரியமாணிக்கம் அம்பலத்திடம் பேசி கார்த்தியை கட்டாயப்படுத்தி மேடை ஏற்றவைக்கிறார். அப்போது கார்த்திக்கு, முதல் சால்வையை கரியமாணிக்கம் அம்பலம் அணிவிக்க... இரண்டாவது சால்வையை மெய்யர் அணிவிக்கிறார். அதுதான் கார்த்தியின் முதலாவது அரசியல் மேடை. மெய்யர் அணிவித்தது தான் இரண்டாவது அரசியல் சால்வை.

கார்த்தியுடன் மெய்யர்...
கார்த்தியுடன் மெய்யர்...

அன்று மாலை, சிதம்பரத்தின் கண்டனூர் வீட்டுக்கு மெய்யர் அழைக்கப்படுகிறார். அப்போது தலைவர் சிதம்பரம், “நீங்க இன்னைக்கி பண்ணுன வேலை எனக்கு சுத்தமா பிடிக்கல. இனிமே நீங்க இதுமாதிரி எல்லாம் பண்ணப்டாது” என்று மெய்யரை அன்போடு கடிந்து கொள்கிறார். அன்றைக்கு அப்படி சிதம்பரத்தால் அன்புக்கட்டளை போடப்பட்ட அதே மெய்யர் தான் 1996-ல் தமாகா உருவானபோது காரைக்குடியின் 36 வார்டு களிலும் கார்த்தியை வைத்து தமாகா கொடியை ஏற்றுகிறார். கார்த்திக்கு இளைய நிலா என்ற பட்டம்கூட அந்த சமயத்தில் சூட்டப்பட்டது தான்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு சிதம்பரத்துக்கு மட்டுமல்ல... கார்த்திக்கும் பிடித்தமான காங்கிரஸ்காரராகிப் போனார் மெய்யர். இந்த நிலையில் 2009-ல் மெய்யர் குடும்பத்துக்குச் சொந்தமான வீடு ஆக்கிரமிப்பில் இருப்பதாகச் சொல்லி வருவாய் துறை இடிக்க முற்படுகிறது. ஆனால், அந்த இடம் தொடர்பாக 1986-ல் தேவகோட்டை சப்கோர்ட் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருப்பதை எடுத்துச் சொல்லி மன்றாடுகிறது மெய்யர் குடும்பம். ஆனாலும் வீட்டை இடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டுகிறார் தேவகோட்டை சார் - ஆட்சியர் ராகேஷ்குமார் யாதவ்.

வீட்டை இடிக்காமல் தடுப்பதற்காக காங்கிரஸ் உள்பட தனக்குத் தெரிந்த அனைத்துக் கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் தொடர்புகொண்டு பேசுகிறார் மெய்யர். அந்த சமயத்தில் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்காக மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய சிதம்பரத்துக்கும் இந்தத் தகவலைக் கொண்டு சேர்க்கிறார். “கலெக்டரிடம் தலைவர் ஒரு வார்த்தை பேசினால் வீட்டை இடிக்கமாட்டார்களே...” என்று பதறுகிறார். ஆனால், தலைவர் சிதம்பரத்தை சுற்றி இருந்தவர்களுக்கு மெய்யரின் வளர்ச்சி பிடிக்காததால் இந்த விவகாரத்தை அவருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தவும் துணிகிறார்கள். அதனால் அவர்களில் சிலரே வருவாய்த் துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு வீட்டை அவசரமாய் இடிக்கத் தூபம் போடுகிறார்கள்.

மூப்பனார்- சிதம்பரம்
மூப்பனார்- சிதம்பரம்

மதுரையிலிருந்து கிளம்பிய தலைவர் சிதம்பரம் மானகிரி வழியாக மெய்யரின் வீட்டையும் கடந்துதான் காரைக்குடி பெரியார் சிலை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த கட்சிக்காரர் ஒருவரைச் சந்தித்து நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் வழியில் பதறியபடி நிற்கும் மெய்யர் குடும்பத்தையும் தலைவர் சந்திக்க வேண்டி வருமே என யோசிக்கும் சிலர், அவரை அந்த வழியாக அழைத்து வராமல் நான்கைந்து கிலோ மீட்டர் சுற்றி தேவகோட்டை ராஸ்தா வழியாக தலைவர் சிதம்பரத்தைக் காரைக்குடிக்குள் அழைத்துவருகிறார்கள்.

வழக்கமான பாதையைவிட்டு ஏன் இந்த வழியாகப் போகிறோம் என்று உடன் வந்தவர்களிடம் தலைவர் சிதம்பரம் கேட்டாரா இல்லையா? அப்படிக் கேட்டு அதற்கு மற்றவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பதெல்லாம் கடைசிவரை யாருக்கும் தெரியாத ரகசியம். அதைப்பற்றிகூட மெய்யர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மறுநாள் காலையில் தனக்குப் போன் செய்த சிதம்பரம், வீடு இடிப்பு குறித்து ஒருவார்த்தைகூட அக்கறையாக விசாரிக்கவில்லையே என்ற ஆதங்கம் தான் அவரது அடிமனத்தை ரொம்பவே அரித்தது. கிட்டத்தட்ட வீட்டின் பெரும்பகுதியை இடித்தேவிட்டார்கள். அந்தத் தகவலும் தலைவரின் காதுக்குப் போகிறது. அதற்கும் அந்தக் குடும்பத்துக்கு ஆறுதலாய் நாலு வார்த்தை இல்லை.

இதையெல்லாம் பார்த்துவிட்டு மெய்யரின் சகோதரர்கள் ரொம்பவே கொதித்துப் போனார்கள். “காங்கிரஸ்கட்சிக்குள் உனக்கு எதிராக இருப்பவர்களே இப்படி தூண்டிவிட்டு நாம் குடியிருந்த வீட்டையே இடிக்கவைத்துவிட்டார்கள். இதுதான் நீ அரசியலில் இருப்பதால் நாம் கைமேல் கண்ட பலன். ஏனென்று கேட்கக்கூட நாதியற்ற நிலையில் தான் கட்சி தலைவர்கள் உன்னை வைத்திருக்கிறார்கள்” என்று மெய்யர் மீது வருத்தம் கொள்கிறார்கள் உடன்பிறப்புகள். இதற்குப் பிறகு தனது சொந்த முயற்சியில் உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று அதே இடத்தில் இப்போது அந்தக் குடும்பம் கடை வைத்திருப்பது தனிக் கதை.

கார்த்தியுடன் மெய்யர்...
கார்த்தியுடன் மெய்யர்...

காரைக்குடி நகர்மன்ற தேர்தலில் மெய்யர் 4 முறை கவுன்சிலர் பதவிக்காக போட்டியிட்டார். அதில் மூன்று முறை வென்றும் காட்டினார். 1996-ல் தமாகாவில் இவருக்கு சீட் கொடுக்கவில்லை. அதனால் தனது வார்டு மக்களை நம்பி சுயேச்சையாகவே நின்றார். கடைசியில் 10 ஓட்டு வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்தார். மெய்யரின் செல்வாக்கு தெரிந்ததும் 2001-ல் காங்கிரஸ் கட்சியில் அவருக்கு சீட் கொடுத்தார்கள். அந்தத் தேர்தலில் அமோகமாய் வெற்றிபெறுகிறார் மெய்யர். அதனால் 2006-ல் மீண்டும் சீட் கேட்கிறார். எந்த விதத்திலும் மெய்யர் அரசியலில் பெரியாளாகிவிடக்கூடாது என திட்டமிட்ட சிலரால் அந்த முறை அவருக்கு சீட் மறுக்கப்படுகிறது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. மக்களை நம்பி சுயேச்சையாகவே நின்றார்; வென்றார். அப்போதும் எங்களுக்கு புத்தியில் தைக்கவில்லை. அதனால் தான் அடுத்த முறையும் அவருக்கு கை சின்னம் தரமுடியாது போ என்கிறோம். மெய்யரும் நான் எப்படி ஜெயிக்கிறேன் பார் என்று மறுபடியும் சுயேச்சையாகவே நிற்கிறார். சொன்னபடி ஜெயித்தும் காட்டுகிறார்.

அத்தோடு நிற்கவில்லை... நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கும் போட்டிபோடுகிறார். அவரையும் சேர்த்து மொத்தம் இருந்த 36 கவுன்சிலர்களில் 15 பேர் அவருக்கு ஓட்டுப் போட்டார்கள். குறைந்தபட்சம் இன்னும் மூன்று ஓட்டுகள் விழுந்திருந்தால் குலுக்கள் முறையிலாவது அவர் வைஸ் சேர்மன் ஆகியிருப்பார். ஆனால், அந்த சமயத்தில் மாற்றுக் கட்சியினரும் சுயேச்சையாக ஜெயித்தவர்களும் மெய்யருக்கு ஓட்டுப் போட்டார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள் அவரை ஆதரிக்கவில்லை. மெய்யருக்கு ஓட்டுப்போடக் கூடாது என்று அன்றைய தினம் அதிகாரமட்டத்தில் இருந்த காங்கிரஸ் தலைகளே காங்கிரஸ் கவுன்சிலர்களை மாற்றி ஓட்டுப்போட வைத்தார்கள். இந்த விவகாரத்தில் தலைவர் சிதம்பரத்தின் தலையையும் சிலர் உருட்டினார்கள். மெய்யருக்கு ஓட்டுப்போட வேண்டாம் என தலைவர் சொல்லி இருப்பாரா என்று எனக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தலைவர் அந்த மனநிலையில் இருப்பதாக அப்பாவி காங்கிரஸ் கவுன்சிலர்கள் அப்போது நம்பவைக்கப்பட்டார்கள்.

இப்படி, ஒவ்வொரு முறையும் காங்கிரஸ்காரர்கள் தன்னை நம்பவைத்து கழுத்தை அறுத்தாலும் காங்கிரஸ்காரராகவே இருந்தார் மெய்யர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதைக் கண்டித்து மெய்யர் காரைக்குடியில் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஆனால், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என காங்கிரஸ் தரப்பிலிருந்தே காங்கிரஸ்காரர்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் வருகிறது.

மெய்யர் ஒன்றும் தனது ஓட்டலில் வைத்திருந்த அப்பளக் கட்டை காணவில்லை என போராட்டம் நடத்தவில்லையே... அன்புத் தலைவர் ராஜீவை அநியாயமாகக் கொன்றுபோட்ட கொலையாளிகளுக்கு ஆதரவான ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கத்தானே உண்ணாவிரம் கூட்டினார்? இதில் கலந்துகொள்ள வேண்டாம் எனச் சொன்னவர்கள் கட்சிக்கு எப்படி கடைசிவரை விசுவாசமானவர்களாக இருப்பார்கள் என்று நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

கட்சிக்காரர்கள் இப்படிப் மெய்யரை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிந்ததும் அரசியல் எதிரிகளுக்கு கொண்டாட்டமாகிப் போனது. உண்ணாவிரத பந்தலிலேயே மெய்யரை அடிக்கத் துணிகிறார்கள் மதிமுககாரர்கள். மெய்யரை ஆரம்ப காலத்தில் வழிநடத்தியவர் ஐயா கரியமாணிக்கம் அம்பலம். அவரது பேரனும் இன்றைய திருவாடானை எம்எல்ஏ-வுமான தம்பி கரு மாணிக்கமும் அவரது ஆட்களும் தான் மதிமுகவினரிடமிருந்து அன்றைக்கு மெய்யரை காத்தார்கள்.

நகராட்சி கூட்டத்துக்கு நாயுடன் வந்தபோது...
நகராட்சி கூட்டத்துக்கு நாயுடன் வந்தபோது...

மறுநாள் நடைபெற்ற காரைக்குடி நகர்மன்ற கூட்டத்துக்கு ஜெயலலிதா அரசை கண்டித்து நாயுடன் வருகிறார் மெய்யர். ஏன் என்று கேட்டதற்கு, “மனுசன நம்ப முடியலங்க... கொலைகாரனை எல்லாம் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய முயற்சி செய்யுது. அதனால என்னோட பாதுகாப்புக்காக நாயைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன்” என்றார் மெய்யர். இந்த செயலுக்காக இரண்டு கூட்டங்களில் கலந்துகொள்ள மெய்யருக்கு தடைவிதித்தது நகர்மன்றம். இந்த நடவடிக்கைக்கு அன்றைய காங்கிரஸ் கவுன்சிலர்களும் ஆதரவு.

2006 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வேண்டும் என பலபேர் மனு கொடுக்க வற்புறுத்தப் படுகிறார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசிப் பழகிவிட்ட மெய்யர் இதைக் கேள்விப்பட்டு தலைவர் சிதம்பரத்திற்கே போன்போட்டு, “தம்பி எலெக்‌ஷன்ல நிக்கணும்னு நீங்க விரும்புறீங்களா தலைவரே... சிலபேரு நீங்க கார்த்தி சார் பேருல மனு குடுக்கச் சொன்னதா சொல்லிட்டு திரியுறாங்களே?” என்று கேட்டார். “நான் அப்படியெல்லாம் சொல்லலையே...” என்று சொன்ன தலைவர், கார்த்தி பெயருக்கு மனு கொடுக்கச் சொன்ன அறிவாளிகளை அழைத்து, “இந்த வேலைய இத்தோட நிறுத்திக்குங்க” என்று கடிந்தார்.

அந்த தேர்தலில் என்.சுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும் சிலர், வேட்பாளரை மாற்ற முயன்றார்கள். தலைவர் சிதம்பரமும் அத்தகைய ஒரு மனநிலைக்கு வருகிறார். இதைப் புரிந்துகொண்டவர்கள் மீண்டும், கார்த்தி என்று கொடி தூக்குகிறார்கள். இதையடுத்து, சுந்தரத்துக்குப் பதிலாக யாரை நிறுத்தலாம் என தலைவர் சிதம்பரம் கட்சியினரிடம் கருத்துக் கேட்டார். அப்போது மெய்யரையும் அழைத்துக் கேட்டர். “வேட்பாளரை அறிவித்து வேலைகளைத் தொடங்கிய பிறகு ஆளை மாற்றுவது சரியாக இருக்காது தலைவரே” என்று மற்றவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்தைச் சொன்னார் மெய்யர்.

தனது மகன் கார்த்தியை முதன் முதலில் அரசியல் மேடையில் ஏற்றிய மெய்யர், கார்த்தியை நிறுத்தலாம் என்று சொல்ல வில்லையே என்ற சிறு வருத்தம் அப்போதே தலைவர் சிதம்பரத்துக்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வருத்தத்தை தலைவரின் முகத்தில் தானும் பார்த்ததாக முன்பொருமுறை மெய்யரே என்னிடம் சொல்லி இருக்கிறார்.

தேர்தல் முடிந்த பிறகும் இதுகுறித்து மெய்யர் மீது கார்த்திக்கு வருத்தம் நீடித்தது. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தீபாவளி அன்று தலைவர் சிதம்பரத்திற்கு வாழ்த்துச் சொல்ல சென்னை இல்லத்திற்கு செல்கிறார் மெய்யர். அவரை அன்பொழுக வரவேற்ற சிதம்பரம், மெய்யரையும் கார்த்தியையும் ஓர் அறைக்குள் அனுப்பி, “இரண்டு பேரும் சமாதானமாகி வெளியே வாருங்கள்” என்று சொல்கிறார்.

அப்போது இருவரும் சமாதானம் ஆனார்களா இல்லையா என எனக்கு உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. அதன் பிறகு காரைக்குடி முத்துப்பட்டிணத்தில் மெய்யர் புதிதாக ஒரு வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்துகிறார். தலைவர் சிதம்பரத்தை அந்த நிகழ்வுக்கு அழைக்கிறார். என்ன வருத்தமோ சூழ்நிலையோ தெரியவில்லை மெய்யர் வீட்டுக்கு தலைவர் வரவில்லை. ஆனால், கார்த்தி வருகிறார். மெய்யருடன் கூடுதல் நேரம் பேசிக்கொண்டிருந்த அவர், முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் பெயரைச் சொல்லி, “அவருக்கு எதிரா நீங்க என்ன வேணா பண்ணுங்க; எது வந்தாலும் நான் பாத்துக்கிறேன்” என்று கொம்பு சீவிவிட்டுப் போனார்

கார்த்தி கூட்டத்தில் பேசும் மெய்யர்...
கார்த்தி கூட்டத்தில் பேசும் மெய்யர்...

அரசியல் நிதானம் தெரிந்த மெய்யர், கார்த்தி சொன்னது போல் அப்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. மாறாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கார்த்தி போட்டியிடுவார் என்று பேச்சுகள் வெளியானதுமே அதற்கு எதிர்க்கருத்தைப் பேச ஆரம்பித்துவிட்டார். “உலகமே வியந்து பார்த்த தலைவர் சிதம்பரத்தின் பெயருக்கு களங்கம் வர காரணம் கார்த்தி தான். அப்படியிருக்கையில் தலைவர் இருந்த இடத்தில் கார்த்தியை வைத்துப் பார்க்க என் மனதுக்கு ஒப்பவில்லை” என்று சொன்னதோடு காங்கிரஸ் கட்சியைவிட்டே ஒதுங்கிவிட்டார் மெய்யர். அண்மையில் அவரைப் பார்த்த போது, “நான் இப்ப காங்கிரஸிலும் இல்லை; வேறு எந்தக் கட்சியிலும் இல்லப்பா” என்றார் சத்தமாக.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பது மெய்யரின் நீண்ட நாள் ஆசை. அவருக்கு அந்தப் பொறுப்பைத் தந்திருந்தால் கட்சியை கவுரவமான இடத்தில் வைத்திருந்திருப்பார் என்பது என் போன்றவர்களின் எண்ணம். அவருக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் போனதால் இழப்பு அவருக்கல்ல... காங்கிரஸ் பேரியக்கத்துக்குத்தான் என்பதை பெரியவர்கள் இனியாவது உணர்ந்து, இனி இருப்பவர்களை யாவது கட்சியைவிட்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது எனது மெத்த பணிவான கருத்து.

(தேர்தல் வந்தால் காங்கிரஸ்காரர்கள் ப.சிதம்பரத்துக்கு விழுந்து விழுந்து ஓட்டுக் கேட்பார்கள். ஆனால் 1977-ல், “சிதம்பரத்துக்கு ஓட்டுப்போடாதீங்க” என்று அவர் சாதியைச் சார்ந்த நகரத்தார் ஒருவரே ஊர் ஊராய் பிரச்சாரத்துக்குப் போனார். இத்தனைக்கும் அவரும் காங்கிரஸ்காரர் தான். அவரது கதை என்ன ஆனது தெரியுமா? அடுத்து பார்ப்போம்.)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 22
சிவகங்கையும் சிதம்பரமும்... 21

Related Stories

No stories found.