சிவகங்கையும் சிதம்பரமும்... 20

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... 20

பாப்பாதுரை. சிவகங்கை நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் நகர்மன்ற உறுப்பினராகவும் இருந்தவர். முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஐயா உ. சுப்பிரமணியத்துக்கு நெருங்கிய நண்பர். படித்தவர். அதிரடியாக ஆணித்தரமாக பேச வல்லவர். சிவகங்கை மன்னர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகியாக இருந்தவர்.

உ.சுப. குடும்பத்துடன் பாப்பாதுரைக்கு இருந்த நெருக்கம் தலைவர் ப.சிதம்பரத்தோடு முரண்பாடாய் போனது. அதனால், பெரியவர் பாப்பாதுரைக்கும் தலைவர் சிதம்பரத்துக்கும் சின்னச் சின்ன சலசலப்புகள் வந்ததுண்டு. அந்தச் சமயத்தில், தலைவர் கண்ணில்பட்டவர் அண்ணன் அரணையூர் பழனிச்சாமி.

பழனிச்சாமி
பழனிச்சாமி

பாப்பாதுரையின் சகலையான பழனிச்சாமி, 1984-ல் மக்களின் நேரடி வாக்குப்பதிவின் மூலம் இளையான்குடி ஒன்றிய பெருந்தலைவராக வந்தவர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றவேண்டிய கட்டாயம் வந்தபோது, பலரும் அந்தப் பதவிக்காக முட்டினார்கள்; மோதினார்கள். பின்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ அருணகிரி, எம்.ஏ.டி. அரசு, சுதந்திர பாண்டியன் எனப் பலரும் மோதியபோது, அவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு அரணையூர் பழனிச்சாமியை அந்த இடத்தில் உட்காரவைத்தார் அன்புத் தலைவர் சிதம்பரம்.

பழனிச்சாமி, ப.சிதம்பரத்தின் மீது பெரிய அளவில் பற்றும் பாசமும் கொண்டவர். ஒருமுறை அவர் தனது சகலை பாப்பாதுரை வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த காங்கிரஸ் இளைஞர்கள் சிலர், அமைச்சர் சிதம்பரத்தை விமர்சித்துச் சிரித்தார்கள். இதைச் சகித்துக்கொள்ளமுடியாமல், “இனிமேல் நான் இங்கு வரமாட்டேன்” என்று சகலையோடு கோபித்துக்கொண்டு வந்தவர் அரணையூர் பழனிச்சாமி. அப்படி ஒரு சிதம்பர பாசம் கொண்டவர் அவர்.

சிதம்பரத்துடன் பழனிச்சாமி
சிதம்பரத்துடன் பழனிச்சாமி

பொதுவாக, தலைவர் சிதம்பரம் தேர்தல் நெருங்கும்போது மாநாடுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில், 1995-ல் இளைஞர் காங்கிரஸ் மாநாடு, மாணவர் காங்கிரஸ் மாநாடு என பல்வேறு மாநாடுகளை முன்னெடுத்தார். அப்போதெல்லாம் போஸ்டர்கள், பேனர்கள் வடிவமைக்கும்போது மாவட்ட காங்கிரஸ் தலைவரான பழனிச்சாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அறிவுறுத்தல்படிதான் சில விஷயங்களை செய்ய முடியும்; படங்களைப் போட முடியும்.

ஆனால், இன்றைக்குப் போலவே அன்றைக்கும் சிதம்பரத்தின் உதவியாளர்கள் தலைவர் சிதம்பரத்தை மட்டுமே பிரதானப்படுத்தி போஸ்டர்கள் பேனர்கள் வடிவமைக்கச் சொன்னார்கள். அதை மறுத்த பழனிச்சாமி, கட்சியின் அகில இந்திய தலைமை, மாநில தலைமை அதற்குப் பிறகுதான் உள்ளூர் தலைமையின் படங்களைப் போட வேண்டும் என்று பிடிவாதம் காட்டினார்.

இந்த விவகாரங்கள் எல்லாம் தலைவர் சிதம்பரத்தின் காதில் வேறு மாதிரியாய் திரிக்கப்படுகின்றன. அவரும் அதை நம்பிப் போனதால், இருவருக்கும் இடையில் இடைவெளி விழுகிறது. இப்படி இருக்கும்போதே சிதம்பரம் போன்றவர்கள் மூப்பனாரின் தமாகாவில் முதல் ஆளாய் இடம்பிடிக்கிறார்கள். ஆனால், பழனிச்சாமி எங்கும் போகாமல் தாய்க்கட்சியிலேயே தங்கிவிடுகிறார். தலைவர் சிதம்பரம் பலமுறை பேசியும்கூட, “நான் கட்சியை விட்டு வரமாட்டேன்; காங்கிரஸில்தான் இருப்பேன்” என்று உறுதியாகவே இருந்தார் பழனிச்சாமி.

ஜி.கே.வாசனுடன்...
ஜி.கே.வாசனுடன்...

முள்ளை முள்ளால் எடுப்பதில் கெட்டிக்காரரான தலைவர் சிதம்பரம், தமாகா உருவானபோது பழனிச்சாமியின் இன்னொரு சகலையான கே.கே.காசிலிங்கத்தையே மாவட்ட தலைவராக்கினார். போஸ்டர் ஸ்பெஷலிஸ்ட்டான காசிலிங்கம் 3 முறை தமாகா மாவட்ட தலைவராக தொடர்ந்தார். ஒரு கட்டத்தில், பழனிச்சாமி முன்பு வகித்த இளையான்குடி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கும் காசிலிங்கம் ப.சிதம்பரத்தால் கொண்டுவரப்பட்டார்.

காசிலிங்கமும் தலைவர் சிதம்பரத்தின் பெயரில் மிகப்பெரிய பற்றுதலும் பாசமும் உடையவர். சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு பிரம்மாண்ட அலுவலகம் தொடங்கி, சொந்தக் காசைப் போட்டு கட்சி வளர்த்தவர். சிவகங்கை காங்கிரஸ் அரசியல் அவரையும் எந்த ஊர் வந்து பார் என்றது. தியாகத்துக்கு வேலை இல்லாமல் போனதால், காசிலிங்கம் கொஞ்சம் கொஞ்சமாக கடைசி வரிசைக்குப் போனார். இப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். அவரை கனிவோடு கொண்டு நோக்கத்தான் காங்கிரஸில் ஆளில்லை.

முள்ளை முள்ளால் எடுக்கத் தெரிந்தவர்கள் காரியம் முடிந்ததும் அந்த முள்ளை கையிலேவா வைத்திருப்பார்கள்? அண்ணன்மார்கள் பழனிச்சாமி, கே.கே.காசிலிங்கம் ஆகியோரின் இன்றைய நிலையை நினைத்தால் எனக்கு இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. சகலையும் சகலையும் மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள். ஆனாலும் காங்கிரஸைவிட்டுப் போகவில்லை. இப்படிப்பட்ட தியாகிகளை இன்னும் கொஞ்சம் உயரத்தில் வைத்துப் பார்த்திருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

(காங்கிரஸை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கியபோது, அதற்குப் பலரும் பலவாறு நியாயம் கற்பித்தார்கள். அந்த சமயத்தில், “பதவி சுகத்துக்காக நான் கட்சி மாறமாட்டேன்” என்று சிவகங்கை பயணியர் விடுதியில் நின்று கம்பீரமாய் சொன்னார் ஒரு காங்கிரஸ்காரர். யாரிடம் தெரியுமா? தன்னையும் தமாகாவுக்கு அழைத்த அன்புத் தலைவர் ப.சிதம்பரத்திடம். அப்படிச் சொன்னவர் காங்கிரஸில் இப்போது எப்படி இருக்கிறார் என்று அடுத்து பார்க்கலாம்!)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 20
சிவகங்கையும் சிதம்பரமும்... 19

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in