சிவகங்கையும் சிதம்பரமும்... 15

காணாமல்போன காங்கிரஸ் குடும்பங்களின் கதை!
சிவகங்கையும் சிதம்பரமும்... 15

2014 மக்களவைத் தேர்தலில் தலைவர் சிதம்பரம் போட்டியிடவில்லை என்று முடிவுசெய்த பிறகு, தனக்குப் பதிலாக இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சிவகங்கை தொகுதியில் நிறுத்த முயற்சி செய்தார். ஆனால், காங்கிரஸ் தலைமை அவரது சிபாரிசை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அப்போது பேசப்பட்டது.

தங்களுடைய ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ஒரு தலைவர், தேர்தலில் போட்டியிட தயங்கியது அன்புத் தலைவர் ராகுல் காந்தியை சற்றே திடுக்கிட வைத்தது.

“நீங்கள்தான் இந்த ஆட்சியினுடைய முகமாக இருந்தீர்கள்... நீங்களே தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் எப்படி? ஆகவே, நீங்கள் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்று அன்புத் தலைவர் சிதம்பரத்திடம், அழுத்தமாகச் சொல்லி அனுப்பி வைத்தார் இளம் தலைவர் ராகுல் காந்தி.

அவர் இப்படிச் சொன்ன பிறகு தலைவரால் தட்டமுடியவில்லை. தனக்குப் பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தினார். அதைக்கூட நீண்ட யோசனைக்குப் பிறகுதான் ஏற்றுக் கொண்டது காங்கிரஸ் தலைமை. அந்தத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 10,27,036. அதில், இளைய நிலா கார்த்தி பெற்ற வாக்குகள் 1,04, 673 என்பதையும் நாம் அறிவோம்.

சரி விஷயத்துக்கு வருவோம். அந்தத் தேர்தலில் தனக்குப் பதிலாக தலைவர் சிதம்பரம் வைத்திருந்த சாய்ஸ், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அப்போதைய தலைவர் டி.புஷ்பராஜ் குடும்பம். புஷ்பராஜின் புதல்வர் டாக்டர் அருண் அல்லது புஷ்பராஜின் சகோதரர் மகன் தர்ம தங்கவேல். இந்த இருவரில் ஒருவரை நிறுத்தத்தான் அப்போது பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்வார்கள்.

இந்தக் குடும்பத்தை தலைவர் சிதம்பரம் ஏன் முன்னிறுத்தினார் என்று கேட்டபோது, “முத்தரையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டதில்லை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் இதுவரை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளிக்கவில்லை. ஆலங்குடி, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் கணிசமாக இருக்கும் முத்தரையர் சமூகத்தினர் பொதுவாக அதிமுகவையே ஆதரிக்கிறார்கள். அவர்களை நம்மை நோக்கி திருப்புகிற வாய்ப்பு இதன் மூலம் உருவாகும். இந்த வாக்குகளுடன் காங்கிஸுக்கு என சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கக்கூடிய வாக்குகளும் சேரும்போது, மரியாதையான இலக்கத்தில் வாக்குகளை பெறமுடியும் என்று தலைவர் சிதம்பரம் கணக்கு போட்டார்” என்று அரசியல் ஞானம் உள்ளவர்கள் அப்போது சொன்னார்கள்.

டி.ஏ.எஸ். தங்கவேலு
டி.ஏ.எஸ். தங்கவேலு

உண்மைதான். அண்ணன் புஷ்பராஜ் குடும்பம் சாதாரண குடும்பம் அல்ல. காமராஜர் காலத்து காங்கிரஸ் குடும்பம். காமராஜர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் வருகிறபோது, அண்ணன் புஷ்பராஜ் அவர்களின் தகப்பனார் டி.ஏ.எஸ். தங்கவேலுவின் கார் தான் அவரை வரவேற்று அழைத்து வரும். காமராஜர் காலத்தில், கட்சியின் தேர்தல் செலவுகளில் பெரும்பகுதியை இந்தக் குடும்பம் கவனித்துக் கொண்டதாகவும் சொல்வார்கள்.

ஐயா தங்கவேலு, திருவரங்குளம் ஒன்றிய தலைவராக இருந்தபோது அப்பகுதி மக்களால், “தங்கம் முதலாளி” என்று தரம்கொண்டு அழைக்கப்பட்டவர். தங்கவேலு ஐயாவின் புதல்வர் புஷ்பராஜ், 1977-ல் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டியில் நின்று வென்றவர். 1984-ல் தலைவர் சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட போது, அதற்கு உட்பட்ட திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு, 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடியவர் புஷ்பராஜ். தன்னைப்போல அந்த 40 ஆயிரம் வாக்குகள் தலைவர் சிதம்பரத்துக்கும் கிடைக்க அவர் அரும்பாடுபட்டு உழைத்தார்.

புஷ்பராஜ்
புஷ்பராஜ்

அந்த சமயத்தில், அண்ணன் புஷ்பராஜ் சட்டப்பேரவையில் தனது தொகுதிக்காக என்ன கோரிக்கை வைத்தாலும் அதை அப்பீல் இல்லாமல் செய்துகொடுத்தார் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர். அந்த அளவுக்கு அண்ணன் மீது அபரிமிதமான அன்பு வைத்திருந்தார் பொன்மனச் செம்மல். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இருந்து அண்ணன் புஷ்பராஜுக்கு அழைப்பு வந்தது. அமைச்சராகும் வாய்ப்புகள் இருந்தும் கூட, அவர் அதிமுக பக்கம் செல்லாமல் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து இருந்தார்.

ஏறக்குறைய 25 ஆண்டுகள், ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அண்ணன் புஷ்பராஜ் பணியாற்றினார். தலைவர் சிதம்பரம் மீது கொண்ட அபிமானத்தின் காரணமாக, 1992-லிருந்து தங்களது இல்லத்தில் எந்த நிகழ்வுகள் நடைபெற்றாலும் அதை தலைவர் சிதம்பரத்தின் தலைமையிலேயே நடத்தியது அண்ணன் புஷ்பராஜ் குடும்பம்.

ப.சிதம்பரத்துடன் புஷ்பராஜ்
ப.சிதம்பரத்துடன் புஷ்பராஜ்

புஷ்பராஜின், சகோதரர் மகன் தர்ம தங்கவேல் திருமணத்துக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் சிதம்பரத்தால் வரமுடியவில்லை. தனக்குப் பதிலாக தனயனை அனுப்பி வைத்தார் தலைவர். கார்த்தி சிதம்பரம் தாலி எடுத்துக் கொடுக்க அந்தத் திருமணம் நடந்தது.

பிற்பாடு இந்தக் குடும்பத்தினர் பிரம்மாண்டமாக கட்டிமுடித்த மருத்துவனையானது, சிதம்பரத்தின் தேதி கிடைக்காமல் ஒன்றரை ஆண்டுகளாக திறப்பு விழாவுக்குக் காத்திருந்ததாகச் சொல்வார்கள். இப்படியெல்லாம் இருந்த அந்தக் குடும்பம், இன்றைக்கு காங்கிரஸைவிட்டு விலகிப்போய் நிற்கிறது.

2019-ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் பதவிக்கு தனது மனைவி உமா மகேஸ்வரியை நிறுத்த தர்ம தங்கவேலு விரும்பினார். ஆனால், இதை கார்த்தி சிதம்பரம் முதலில் ஏற்கவில்லை. “இவர்களை நிறுத்தினால் தான் அங்கே வெற்றி பெறமுடியும்” என்று திமுக சொன்னதன் அடிப்படையில், பெரும் போராட்டத்துக்குப் பிறகு உமா மகேஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், அவருக்கான கட்சியின் வேட்பாளர் அங்கீகாரக் கடிதம் பெறுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை அப்போது மாவட்ட தலைவராக இருந்தும் தர்ம தங்கவேலு சந்தித்தார். இந்தக் குடும்பம் இப்படியான கசப்பான அனுபவத்தை எதிர்க்கொண்டு வருகிறது என்றதும், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் களத்துக்கு வந்துவிட்டார். மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுகவை ஜெயிக்க வைக்க அப்போது உமா மகேஸ்வரியின் தயவு அவருக்குத் தேவைப்பட்டது. காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மீது உமா மகேஸ்வரிக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை, அவரை அதிமுகவை நோக்கித் தள்ளியது. விஜயபாஸ்கர் நினைத்ததும் நடந்தது. உமாவும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆலங்குடி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கான கல்வெட்டை மாவட்ட தலைவர் தர்ம தங்கவேலுவின் பெயர் இல்லாமலே வைத்தார்கள். அதை கார்த்தி திறந்துவைத்தபோது, 2 பேருக்குமான மனச்சங்கடம் இன்னும் கூடுதலானது. அப்போதுதான் தனக்கு மரியாதை இல்லாத இடத்தில், இனியும் தொடர்வதா என்ற கேள்வி தர்ம தங்கவேலுவுக்குள் எழுந்தது.

தர்ம தங்கவேலு
தர்ம தங்கவேலு

இப்படியான மனப்போராட்டத்தில் இருக்கிறார் மனிதர் என்றதும் தங்கவேலுவுக்கு அதிமுகவிலிருந்து அழைப்பு வருகிறது. “ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீங்கள் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட நாங்கள் வாய்ப்புத் தருகிறோம்; வந்துவிடுங்கள்” என்கிறார் விவரம் தெரிந்த விஜயபாஸ்கர். தனக்குள்ளே வருத்தங்கள் நிறைய இருந்தாலும் உடனடியாக இதற்கு இசைந்துவிடவில்லை தங்கவேல். கார்த்தியால் ஏற்பட்ட அவமரியாதைகள் அவரை மாற்றி யோசிக்க வைத்தது. தனக்கான அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குடியில் அதிமுக வேட்பாளராக நின்றார். அதிமுகவுக்கு எதிரான அலை அவரையும் அங்கே மூழ்கடித்தது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தங்களது குடும்பத்துக்கு அரசியல் ரீதியாக இத்தனை இடற்பாடுகள் வந்தாலும், இன்றுவரை புஷ்பராஜ் தனக்கு ஏற்படும் சங்கடங்களை, வருத்தங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்கிறார். இதனிடையே, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக வேலை பார்த்ததாகச் சொல்லி, புஷ்பராஜ், எம்.கே.சுந்தரம் உள்ளிட்ட சிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, உரிய பதிலைத் தந்துவிட்டு, “எஞ்சிய காலத்துக்கும் நான் காங்கிரஸ்காரனாகவே இருப்பேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவருகிறார் புஷ்பராஜ்.

தர்ம தங்கவேல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்தவர். பின்னர், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். அவரை பொறுத்தவரை, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை மிகச் சிறப்பாக நடத்தக்கூடிய வல்லமை பெற்றவர். மாவட்டத்தில் அனைத்து வட்டார தலைவர்களையும், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்களில் ஒருவனாக இருந்தவர். ஆயிரம் இருந்தாலும் அவரை எல்லாம் நாம் போகவிட்டிருக்கக் கூடாது; போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டும். இதைச் சொன்னால்தானே சிலருக்கு கோபம் வருகிறது!

(கட்சி ஆபீஸுக்காக நகரத்தார் வீட்டின் முகப்பில் ஒரு பகுதியை வாடகைக்குப் பிடித்திருந்தார் அந்த காங்கிரஸ் தலைவர். அசதி எடுத்தால் ஓய்வெடுக்க அங்கே ஒரு மரக் கட்டிலும் வாங்கிப் போட்டிருந்தார். ஒரு தடவை அவரைச் சந்திக்கப் போனபோது அந்தக் கட்டிலில் உட்கார்ந்த நான், “என்னண்ணே... கட்டில் கால் இப்டி ஆடுது” என்றேன். அதற்கு, “ஏய்... எதவாப்பா. நீ பாட்டுக்கு ஆட்டி காலை ஒடைச்சுப்புடாத. இது சாதாரண கட்டில்னு நினைச்சியா... நம்ம தலைவர் (சிதம்பரம்) படுத்த கட்டில்” என்று விழிகள் விரிய விளக்கம் சொன்னார். ஒரே ஒருநாள் சிதம்பரம் படுத்த கட்டிலையே, அத்தனை பயபக்தியுடன் பாதுகாத்த அந்த தலைவர் அண்மையில் தான் காலமானார். இறக்கும்போது அவர் கதர்சட்டைக்காரராக இருந்தாரே தவிர, காங்கிரஸ் பேரியக்கத்தில் இல்லை. ஏன்? - அடுத்து பார்ப்போம்.)

முந்தைய அத்தியாயத்தை படிக்க:

சிவகங்கையும் சிதம்பரமும்... 15
சிவகங்கையும் சிதம்பரமும்... 14

Related Stories

No stories found.