மராட்டியத்துக்கு வெளியே படையெடுக்கும் சிவசேனா!

ஆதித்யா தலைமையில் உதயம்!
மராட்டியத்துக்கு வெளியே படையெடுக்கும் சிவசேனா!
ஆதித்யா, உத்தவ்

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வெளியேயும் கட்சியை வளர்க்கவும், தேர்தல்களில் போட்டியிடவும் சிவசேனா கட்சி முடிவு செய்திருக்கிறது. முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தலைமையில், இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதர எதிர்க்கட்சிகளை எப்படியாவது சமாளித்துவரும் பாஜகவுக்கு, சிவசேனா சிம்ம சொப்பனமாக மாறிவருகிறது. இந்துத்துவ கொள்கைகள், ஒரே ஓட்டு வங்கி என்று இருகட்சிகள் இடையிலான மோதல் அவற்றின் வாக்கு விகிதங்களையும்கூட சிதறடிக்கக் கூடியது. சிவசேனா கட்சி எடுத்திருக்கும் புதிய முடிவால், மகாராஷ்டிரத்தில் மட்டுமே நீடிக்கும் மோதல்போக்கு இனி வட மாநிலங்கள் நெடுக விரியவும் வாய்ப்பாகி உள்ளது.

மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்துக்கு வெளியேயும் கால் பரப்பி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே கவனம் செலுத்திய திரிணமூல், கோவா தேர்தலிலும் களமிறங்கி உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் நேரடியாக போட்டியிடாவிடிலும், சமாஜ்வாதி கட்சிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, பஞ்சாப் மற்றும் கோவாவில் நம்பிக்கையோடு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. உபி, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் தங்களுக்கான வாக்கு வங்கிகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், கட்சிக்கும் எதிராக, மகாராஷ்டிர மாநில அளவில் தீவிரமாக வினையாற்றி வரும் சிவசேனா, தனது தளத்தை விரிவுபடுத்தவும் பாஜகவுக்கு எதிராகவும், மகாராஷ்டிராவுக்கு வெளியேயும் கட்சியை வளர்க்க முடிவு செய்துள்ளது. 2024 மக்களவை தேர்தலை குறிவைத்து சிவசேனா வியூகங்களை வகுத்து வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரே தலைமையில், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளன.

பெரும்பான்மை இந்துக்கள் செறிந்துள்ள வட மாநிலங்களை குறிவைத்து, முதல்கட்ட நகர்வை சிவசேனா உத்தேசித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாங்கள் நுழைவது, பாஜகவுக்கு பின்னடைவாக அமையும் என அக்கட்சி கருதுகிறது. தீவிரமான இந்துத்துவ கொள்கைகள், பால் தாக்கரேயின் பாரம்பரியம், மராட்டியத்தில் முன்னுதாரண ஆட்சி, ஆதித்யா தலைமையிலான துடிப்பான பிரச்சாரம் ஆகியவை பாஜகவுக்கு இணையாக சிவசேனா கட்சியை அங்கு வளர்க்க உதவும் என்று நம்புகிறது.

தேசியக் கட்சியாக வளர்வது, மகாராஷ்டிர மாநிலத்திலும் கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் என்றும் சிவசேனா கணக்குப் போடுகிறது. தண்டுவட அறுவை சிகிச்சை காரணமாக நீண்ட பயணங்களை உத்தவ் தாக்கரே தவிர்த்து வருவதாலும், சிவசேனா கட்சியின் வெளிமாநில நடவடிக்கைகள், ஆதித்யாவை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.