மணீஷ் சிசோடியா கொலைகாரர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; அவரைக் கொல்ல சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா மணீஷ் சிசோடியா கொலைகாரர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; அவரைக் கொல்ல சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

திகார் சிறையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மிகவும் ஆபத்தான குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதால், அவரின் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

மணீஷ் சிசோடியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி கட்சியின் சௌரப் பரத்வாஜ், " விசாரணையின் கீழ் உள்ள மணீஷ் சிசோடியா, கடுமையான குற்றவாளிகளுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். விசாரணைக் கைதியை செல் எண் 1ல் வைத்திருப்பது இதுவே முதன்முறை. அங்கே இருப்பவர்கள் பல கொலை வழக்குகளுடன் தொடர்புடைய மிகவும் கடினமான குற்றவாளிகள், அவர்களில் சிலர் மனநலம் சரியில்லாதவர்கள். மணீஷ் சிசோடியா தியானம் செய்யக்கூடிய விபாசனா அறையில் அடைக்கப்படுவார் என்று நீதிமன்றம் கூறியது. நாங்கள் அரசியல் எதிரிகள், ஆனால் மத்திய அரசு இப்போது அரசியல் கொலைகளை செய்யுமா?" என்று தெரிவித்தார்

மேலும், "நாங்கள் அரசியல் எதிரிகள், ஆனால் இதுபோன்ற பகைமை ஏற்கத்தக்கதா?. நீங்கள் எங்களால் பலமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளீர்கள். எத்தனையோ சதிகளுக்குப் பிறகும் எங்களுக்கு டெல்லி மேயர், துணை மேயர் பதவிகள் வந்தன. எங்கள் தலைவர்களை சிறைக்கு அனுப்பியுள்ளீர்கள் ஆனால் மக்களின் அனுதாபம் எங்களிடம் உள்ளது" என்று கூறினார்.

சிசோடியா மூத்த குடிமக்களுக்கான அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற கைதிகளைப் போலவே, சிசோடியாவுக்கும் அடிப்படை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினர்.

இது தொடர்பாகப் பேசிய ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், "மணீஷ் சிசோடியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு கவலை உள்ளது. சிசோடியாவை கண்டு நீங்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிசோடியா பிப்ரவரி 26ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். மார்ச் 6 அன்று, அவர் மார்ச் 20 வரை 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிசோடியா பகவத் கீதை புத்தகத்தை கையுடன் சிறைக்கு கொண்டு வந்தார். நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட பிற பொருட்கள் அவரது வீட்டிலிருந்து இன்னும் பெறப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாயன்று, சிசோடியா சில கூடுதல் ஆடைகளைப் பெற்றார். திங்கள்கிழமை இரவு, அவருக்கு போர்வைகள், சோப்பு மற்றும் பல்துலக்கும் பொருட்கள் போன்ற அடிப்படை பொருட்கள் வழங்கப்பட்டன, மேலும் இரவு உணவிற்கு சாதம், சப்பாத்தி, பருப்பு போன்றவை வழங்கப்பட்டதாக சிறை கையேட்டின் படி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, பகவத் கீதை, ஒரு ஜோடி கண்ணாடி மற்றும் மருந்துகளை சிறைக்கு எடுத்துச் செல்ல சிசோடியாவை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், தியானம் செய்யும் அறை வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு திகார் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in