பண்ணை வீடாக மாறிய பவர் சென்டர்!

சிறுதாவூர் பங்களா அன்றும் இன்றும்
சிறுதாவூர் பங்களா
சிறுதாவூர் பங்களா

அரசர்கள் வீழ்த்தப்பட்டால் கோட்டைகளும் குட்டிச் சுவராகும் என்பது வரலாறு. ஜெயலலிதா அரசியலில் கோலோச்சிய காலங்களில் சிறுதாவூர் பங்களா செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் போல மினி தலைமைச் செயலகமாகவே இருந்த காலங்கள் உண்டு. கன்ட்ரோல் ரூம், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு என ராணுவக் கண்காணிப்பைப் போல இருந்த சிறுதாவூர் பங்களா, இப்போது பண்ணை வீடாக மாறியிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ளது சிறுதாவூர். சசிகலாவிற்குச் சொந்தமானது என சொல்லப்பட்டாலும், இன்றுவரை சித்ரா என்பவரின் பெயரில்தான் பங்களா உள்ளது. பங்களாவைச் சுற்றிலும் சசிகலா மற்றும் இளவரசிக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. சுற்றுப்புறத்தில் உள்ள 116 ஏக்கர் நிலத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களும் அடக்கம் என்கிறார்கள்.

2001-ம் ஆண்டிலிருந்துதான் ஜெயலலிதா அடிக்கடி இங்கு வரத்தொடங்கினார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை காக்கிகளின் கண்காணிப்பு வளையத்தால் பங்களா பாதுகாக்கப்பட்டு வந்தது. லிஃப்ட், நீச்சல் குளம், பூங்கா, வாக்கிங் ட்ராக், பேட்டரி கார் என நட்சத்திர விடுதிக்கு இணையான வசதிகள் பங்களாவிற்குள் இருக்கின்றன. தென்னை மரங்கள், நெல் வயல்கள், காய்கறித் தோட்டம் என பங்களாவைச் சுற்றிலும் பசுமைக்கும் பஞ்சமில்லை.

பங்களா நுழைவு வாயில்...
பங்களா நுழைவு வாயில்...

ஜெயலலிதா எங்கெல்லாம் தங்கினாரோ அங்கெல்லாம் சர்ச்சைகளும் பயணிக்கும். அந்த வகையில், சிறுதாவூர் பங்களாவிலும் அவ்வப்போது சர்ச்சைகள் வெடித்து பூதாகரமாகும். சிறுதாவூர் பங்களாவைக் கட்டி எழுப்புவதற்காக பட்டியலின மக்களின் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அடிக்கடி போராட்டங்கள் வெடிக்கும்.

2004 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் நேர்காணலை சிறுதாவூர் பங்களாவில்தான் நடத்தினார் ஜெயலலிதா. 2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க இந்த பங்களா வளாகத்தில் தான் கன்டெய்னர் லாரிகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக வைகோ குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து பங்களாவைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இது அப்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

அதே வருடத்தில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போது முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை சசிகலா தரப்பினர் இங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் ஒரு செய்தி உண்டு. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்ற சில மாதங்களில் சசிகலாவின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. அதில் சிறுதாவூர் பங்களாவும் அடக்கம். இந்த பங்களா அமைந்துள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தீப்பொறி பறந்தால் கூட ‘சிறுதாவூர் பங்களாவில் தீ’ எனச் செய்திகள் காட்டுத் தீயாய் பரவும். இதெல்லாம் ஒருகாலம்; இப்போது நிலைமை தலைகீழ்!

சிறுதாவூர் பங்களா உள்ளே...
சிறுதாவூர் பங்களா உள்ளே...

சிறுதாவூர் பங்களா குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம். “ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அடிக்கடி இங்குவந்து தங்கி பணியைக் கவனிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 2012 முதல் அடிக்கடி இங்கே வந்து தங்கத் தொடங்கினார். அவருக்காகவே பங்களாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பங்களாவிலிருந்து கோட்டைக்குச் செல்லும் போது பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருக்கும். ஜெயலலிதா பங்களாவில் தங்கிய காலங்களில் டிஎஸ்பி ஒருவரின் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுழற்சி முறையில் சுமார் 50 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

பங்களாவிற்கு ஜெயலலிதா வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிடும். கன்ட்ரோல் ரூம், சிசிடிவி கேமராக்கள் எனக் காக்கிகளின் கெடுபிடிகள் ஏராளம். ஆரம்பக் காலத்தில் தாண்டவமூர்த்தி என்பவர் பங்களாவில் வேலைசெய்த தனது மாமனார் மூலம் சசிகலாவிற்கு அறிமுகமானார். பங்களா நிலத்தில் விவசாயம் செய்வது, பங்களாவைப் பாதுகாப்பது என முக்கிய பொறுப்புகளை அவரிடம் சசிகலா ஒப்படைத்தார். சசிகலாவின் அறிமுகத்தை வைத்து ஏகப்பட்ட தொழில்களில் கோலோச்சி உச்சத்திற்கு வளர்ந்துவிட்டார் தாண்டவமூர்த்தி. இப்போதும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இந்த பங்களா இருக்கிறது.

ஜெயலலிதா மறைந்ததும், கெடுபிடிகளும் காணாமல் போனது. எப்போதும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த கன்ட்ரோல் ரூம் தற்போது பூட்டியே கிடக்கிறது. வாயிலில் பங்களா பணியாளர் ஒருவர் மட்டும் காவலுக்கு இருக்கிறார். பங்களா நிலத்தில் வழக்கம் போல விவசாயம் நடக்கிறது. ஆனால், நிலத்தில் வேலை செய்பவர்களை பங்களா இருக்கும் பகுதிக்கு அனுமதிப்பதில்லை. பராமரிப்பு பணிகள் இல்லாததால் ஆங்காங்கே புதர் மண்டியிருக்கின்றன. எப்போதாவது ஒருமுறை சுத்தம் செய்கிறார்கள். சசிகலாவோ அவரது உறவினர்களோ இப்போது இங்கு வருவதில்லை. அதனால் இந்த பங்களாவே இப்போது களையிழந்து போச்சு” என்கிறார்கள் அவர்கள்.

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

சிறுதாவூர் பங்களாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுட்டிக்காட்டப்படும் தாண்டவமூர்த்தியிடம் பேசினோம். “சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் பங்களாவிற்கு எப்போது வருகிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. பங்களா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய சசிகலா என்னை அனுமதித்தார். அதைத்தான் இன்றுவரை செய்து வருகிறோம். இந்த நிலத்தில் வருசம் முழுசுக்கும் விவசாயம் நடைபெறும்.

ஆரம்பத்தில் நாங்கள் விவசாயம் செய்தோம். தற்போது எங்களைச் சார்ந்தவர்கள் அங்கு விவசாயம் செய்கிறார்கள். பங்களா பூட்டிய நிலையில்தான் இருக்கிறது. வழக்கு தொடர்பாக நுழைவு வாயிலில் நோட்டிஸ் ஒட்டப்பட்டதே தவிர, பங்களாவிற்கு சீல் வைக்கப்படவில்லை. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. பங்களாவிற்குள் என்ன இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது” என்றார்.

ஆக மொத்தத்தில், ஒரு காலத்தில் அதிகாரக் கோட்டையின் ஒரு அங்கமாக இருந்த சிறுதாவூர் பங்களா, இப்போது உற்சவர் இல்லாத சப்பரம் போல பொலிவிழந்து கிடக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in