‘சாவர்க்கரை கேள்வி கேட்பது பாவம்’ - ராகுல் காந்தியை விளாசும் அசாம் முதல்வர்

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா

சாவர்க்கரைப் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்புவது பாவம் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

600 ஆண்டுகளுக்கும் மேலாக அசாமை ஆண்ட அஹோம் வம்சத்தின் புகழ்பெற்ற தளபதியான லச்சித் பர்புகானின் 400வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவை முகலாயர்களால் ஒருபோதும் கைப்பற்ற முடியவில்லை. எனவே வரலாற்றை மாற்றி எழுத வேண்டும், ஏனென்றால் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் திரிபுபடுத்தி, முகலாய பேரரசர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்றினர் என எழுதியுள்ளனர். முகலாயர்கள் ஒருபோதும் வடகிழக்கு இந்தியா, அசாம் மற்றும் தென்னிந்தியா ஆகியவற்றை கைப்பற்றவில்லை” என தெரிவித்தார்

சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த திரு சர்மா, "சாவர்க்கர் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். நாட்டுக்காக அவர் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். சாவர்க்கரின் பங்களிப்பை கேள்வி கேட்பது பாவம், ராகுல் காந்தி இந்த பாவத்தை செய்யக்கூடாது. நாட்டுக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யாதவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கேள்வி கேட்கக்கூடாது " என்றார்.

முன்னதாக, மகாராஷ்டிராவில் 'பாரத் ஜோடோ யாத்திரை'யின் போது செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு, 'ஐயா, உங்களின் மிகவும் கீழ்ப்படிதலுள்ள ஊழியராக இருக்க வேண்டுகிறேன்' என்று எழுதி அதில் கையெழுத்திட்டார். பயம் காரணமாக சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு உதவினார். இந்த மன்னிப்பு கடிதத்தில் கையெழுத்திட்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் படேல் போன்ற தலைவர்களுக்கு அவர் துரோகம் செய்தார்" என்றார். ராகுலின் இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது தானே நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in