‘குஜராத்தில் அவர்களை கால் பதிக்க அனுமதிப்பது பாவம்’ - ஆம் ஆத்மியை சாடும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நர்மதா அணை திட்டத்தை பல ஆண்டுகளாக எதிர்த்தவர்களுக்கு தேர்தலில் சீட்டு வழங்கியவர்களை குஜராத்தில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி மறைமுகத் தாக்கியுள்ளார்.

படிதார்களின் கோட்டையாக கருதப்படும் சூரத் நகரின் மோட்டா வராச்சா பகுதியில் நடந்த மெகா பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "சூரத் மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பண்டித ஜவஹர்லால் நேரு நர்மதா அணை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார், ஆனால் அது 50 ஆண்டுகளாக அத்திட்டம் முடங்கியது. அவர்கள் (செயற்பாட்டாளர்கள்) உலகில் யாரும் இந்த அணை திட்டத்திற்காக குஜராத்திற்கு நிதி வழங்காமல் இருப்பதை உறுதி செய்தனர். அத்தகையவர்களுக்கு அவர்கள் (ஆம் ஆத்மி கட்சி) டிக்கெட் கொடுத்துள்ளனர். மூன்று தலைமுறைகளின் எதிர்காலத்தை அழிக்கும் இதுபோன்றவர்களை மாநிலத்தில் காலூன்ற அனுமதிப்பது பாவம் செய்வது போன்றது. நர்மதா அணை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும், "நாட்டில் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று காங்கிரஸ் நினைக்கிறது, ஆனால் சூரத் மக்களுக்கு உள்கட்டமைப்பின் முக்கியத்துவம் தெரியும். மத்தியத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​மெட்ரோ ரயில் திட்டம், சூரத் நகருக்கு விமான நிலையம் என நாங்கள் கேட்டோம், ஆனால் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. டபுள் எஞ்சின் அரசு வந்த பிறகு, சூரத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ பணிகள் தொடங்கியுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு டபுள் எஞ்சின் அரசுகள் வேண்டும்" என்றார்.

சர்தார் சரோவர் அணைக்கு எதிராக பிரச்சாரம் செய்த ஆர்வலர் மேதா பட்கருக்கு 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கிய ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி பிரதமர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தற்போது சூரத்தில் முகாமிட்டுள்ளார், அக்கட்சி குஜராத் தேர்தலில் சில இடங்களை கைப்பற்றும் என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in