ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி ஜன.13-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை: திருமாவளவன் அறிவிப்பு

திருமாவளவன்
திருமாவளவன்

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி ஜனவரி 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையின் போது, திராவிட மாடல் என்ற வார்த்தை உள்பட தலைவர்களின் பெயரையும் வாசிக்காமல் ஆர்.என்.ரவி தவிர்த்தார். இதனைக் கண்டித்து, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேசியதும், நிகழ்வில் பாதியிலேயே , தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆர்.என்.ரவி வெளியேறியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆளுநரின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளுநரின் போக்குகள் ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான். ஆளுநரின் ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது. தேசிய கீதம் இசைப்பதற்கு முன் ஆளுநர் வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி தேசிய கீத அவமதிப்பாகும். ஆளுநர் இனியும் பதவியில் நீடிக்க தகுதியில்லை, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in