‘காங்கிரஸ் தலைவர் விரும்பியபடி’ ராஜினாமா செய்த சித்து!

‘காங்கிரஸ் தலைவர் விரும்பியபடி’ ராஜினாமா செய்த சித்து!

5 மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், அம்மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பதவிவிலக வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

இந்தத் தேர்தல் தோல்வி குறித்து ஆராயவும், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 13) டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், “உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், கட்சியை மறுசீரமைப்பதற்குத் துணைபுரியும் வகையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்” என கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா நேற்று ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இதை ஏற்று தனது பதவியை சித்து ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பாக, சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தின் நகலை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சித்து. அதில், காங்கிரஸ் தலைவர் விரும்பியபடி தான் ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சித்து, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான ஜீவன் ஜியோத் கவுரிடம் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92-ல் வென்று ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியமைக்கிறது. முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் பகவந்த் மான்!

Related Stories

No stories found.