சித்தராமையா எனும் புத்தியாளர்; திராவிட மாடலுக்கு தோதானவர்!

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு முன்னெடுப்பாரா?
கர்நாடக முதல்வராக சித்தராமையா
கர்நாடக முதல்வராக சித்தராமையா

கர்நாடக தேர்தல் களத்தில் காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு இடையிலான மோதலுக்கு நிகராக, முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த மோதலும் தீவிரம் பெற்றது. இறுதியில், ஆர்ப்பாட்டமான டி.கே.சிவகுமாரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, முதல்வர் நாற்காலியை ஆக்கிரமித்திருக்கிறார் அமைதியான சித்தராமையா.

இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கும் சித்தராமையாவின் புத்திசாலித்தனம், ஆட்சி - கட்சி இரண்டிலும் கர்நாடகத்துக்கு அப்பாலும் கைகொடுக்கும் என்று காங்கிரஸ் தலைமை கணித்துள்ளது. இந்த வகையில், 2024 மக்களவை தேர்தலிலும் சித்தராமையாவின் பங்கு கணிசமாக இருக்கும்.

சித்தராமையாவுக்கு பாலபிஷேகம் செய்யும் தொண்டர்
சித்தராமையாவுக்கு பாலபிஷேகம் செய்யும் தொண்டர்

புடம் போட்ட சோஷலிசம்

டீ விற்றதாக அடிக்கடி தன்னை அடையாளப்படுத்தும் மோடியை பிரதமராக கொண்ட தேசத்தில், அவரது பெயரிலான அலையை கர்நாடகத்தில் பொய்யாக்கிய சித்தராமையா, தனது பால்யத்தை கால்நடைகளை மேய்ப்பதில் கரைத்தவர். அதன் போக்கில் பத்து வயது வரை பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காதவர். ஆடு மேய்க்கும் சிறுவனின் சூட்டிகையால் கவரப்பட்ட, கிராமத்து ஆசிரியர் ஒருவரால் பள்ளிக்கூடத்தில் வலிய சேர்க்கப்பட்டவர்.

தொடக்கப்பள்ளிக்கு பின்னர் சித்தராமையாவை, உயர்நிலைப் பள்ளிக்கு அவரது குடும்பம் அனுப்ப முன்வந்ததற்கு, பள்ளியில் கிடைக்கும் மதிய உணவே முக்கிய காரணமாக இருந்தது. மைசூரு மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் அப்படியான எளிய மற்றும் ஏழ்மை சூழலில் வளர்ந்ததே, பின்னாளில் சட்டக்கல்லூரியில் பயின்றபோது சித்தராமையாவை எளிதில் சோஷலிச கொள்கையில் புடம் போட வாய்ப்பானது.

சித்தராமையா
சித்தராமையா

13 முறை பட்ஜெட் தாக்கல்

சித்தராமையாவின் அரசியல் பயணம் ஆரம்பித்தது காங்கிரஸ் கட்சியில் அல்ல. ஜார்ஜ் பெர்னாண்டஸின் லோக் தளம் கட்சியில் இணைந்து, காங்கிரஸ் எதிர்வரிசையிலிருந்தே அரசியல் பாலபாடங்களை பயில ஆரம்பித்தார். 1983, கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நின்று, தனித்த செல்வாக்கால் முதல் வெற்றியை ருசித்தார். அப்போதைய மாநில முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவின் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஜனதா தளத்தில் ஐக்கியமானார். பால்யத்தில் கால்நடை வளர்த்து படித்தவர், கால்நடை துறைக்கு அமைச்சரானதை கர்நாடகம் கொண்டாடியது. ஒளிவட்டம் பொருந்திய மகாகன அரசியல்வாதிகளுக்கு மத்தியில் தங்களில் ஒருவராக சித்தராமையாவை தரிசித்தது.

பிற்பாடு அவர் நிதியமைச்சராக உயர்ந்தபோது, அந்த சாமானியர்களின் வாழ்வாதாரத்துக்காக நல்ல பல திட்டங்களை தீட்டியது, அவரது அடையாளங்களில் ஒன்றாக நிதியமைச்சகத்தை மாற்றியது. மாநில நிதியமைச்சராக இதுவரை 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சாதனை அனுபவம் சித்தராமையாவுக்கு உண்டு. தற்போதும் கூட டி.கே.சிவகுமாரின் முக்கிய நிபந்தனையான நிதி இலாகாவை, ராகுல் - கார்கே பஞ்சாயத்தில் அமைதியாக வாதிட்டு தன்வசமாக்கி உள்ளார் சித்தராமையா.

எம்எல்ஏக்களுக்கான வாலிபால் போட்டி ஒன்றில் சித்தராமையா(2004)
எம்எல்ஏக்களுக்கான வாலிபால் போட்டி ஒன்றில் சித்தராமையா(2004)

அரவணைத்த காங்கிரஸ்

1992-ல் ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு கிடைத்ததும், அடுத்து வந்த ஆட்சியில் துணை முதல்வராக உயர்ந்தார் சித்தராமையா. 1999-ல் ஜனதா தளம் உடைந்தபோது தேவகௌடாவுடன் வெளியேறி மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மாநிலத் தலைவராக மாறினார். ஆனால், தேவகௌடா வாரிசான குமாரசாமியின் வளர்ச்சியும், அவரது அரசியல் நிலைப்பாடுகளும் சித்தராமையா கொண்ட கொள்கைகளுக்கு எதிராக இருந்தன.

பக்கா சோஷலிஸ்டான சித்தராமையா தனது முக்கிய அடையாளமாக மதச்சார்பற்ற கொள்கையை முன்னிறுத்தி வளர்ந்தவர். ஆனால், அரசியல் லாபங்களுக்காக குமாரசாமி பாஜகவுடன் இழைந்தபோது, அறச்சீற்றம் கொண்டார். இதன் பலனாக கட்சியில் தான் ஓரம்கட்டப்படுவதாக உணர்ந்ததும். கட்சியிலிருந்து அதே சீற்றத்துடன் வெளியேறினார். 'மக்களுக்கான சமூக நீதி இயக்கம்’ என்பதை கட்டமைத்து, ஊர் ஊராகப் பயணப்பட ஆரம்பித்தார். கன்னடர்கள் சித்தராமையாவுக்கு அளித்த வரவேற்பை பார்த்த காங்கிரஸ் தலைமை, சித்தராமையாவையும், அவரது தனி இயக்கத்தையும் கட்சிக்குள் கரைத்துக்கொண்டது.

பிரியங்கா- ராகுல் மற்றும் சிவகுமாருடன் சித்தராமையா
பிரியங்கா- ராகுல் மற்றும் சிவகுமாருடன் சித்தராமையா

40 வருட வரலாற்றை திருத்தினார்

2006-ல் காங்கிரஸில் இணைந்த சித்தராமையா, 2 வருடத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சித் தலைவராக சட்டப்பேரவையில் அதிரடித்தார். எதிரிக்கட்சியாக அல்லாது, சித்தராமையாவின் இணக்கமான அணுகுமுறை முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்களையும் கவர்ந்தது. எதிர்தரப்பினரையும் ரசிக்கச் செய்யும் நையாண்டி பேச்சுக்கு சொந்தக்காரரான சித்தராமையாவின் வாழைப்பழ ஊசிகள் சகலரையும் பதம் பார்த்திருக்கின்றன.

2013 தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியை கர்நாடகத்தில் சித்தராமையா அமைத்தபோது, மாநில வரலாற்றில் 40 வருடங்கள் கழித்து முழுமுதல் முதல்வராக 5 வருடங்களுக்கு ஆட்சி நடத்தி ஆச்சரியம் தந்தார். அப்போது அவர் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற, அடுத்த வந்த 2018 தேர்தலில், “சித்தராமையாவின் மக்கள் நலத்திட்டங்களை பாஜக ஆட்சியிலும் தொடர்வோம்” என்று எடியூரப்பாவை பிரச்சாரம் செய்யவும் வைத்தது.

இரட்டைக்குழல் துப்பாக்கி; சிவகுமாருடன் சித்தராமையா
இரட்டைக்குழல் துப்பாக்கி; சிவகுமாருடன் சித்தராமையா

சாணக்கியர் கணக்கு

அந்தத் தேர்தலில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை அதிரடிகளால் . சித்தராமையா மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார். ’மிஸ்டர் கூல்’ அரசியல்வாதியாக வளையவரும் சித்தராமையா உடன், அதிரடி அரசியலுக்குப் பேர்போன டி.கே.சிவகுமார் மாநிலத் தலைவரானதும் கர்நாடக காங்கிரஸ் இருதுருவம் கண்டது. விசுவாசம் என்பதன் மறுபெயராய், கட்சித் தலைமைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த டி.கே.சிவகுமார், சித்தராமையாவுக்கு உட்கட்சியில் சவாலாக மாறிப்போனார்.

தனது கொள்கைக்குத் தோதான ஜனதா கட்சிகளை கண்டு இறுதியாக காங்கிரஸில் கரைந்த சித்தராமையாவுக்கு, சிவகுமாரின் விசுவாச அடையாளமும், அதிரடி நடவடிக்கைகளும் சவாலாக மாறின. ஆனால் அரசியல் நேக்குடன், கர்நாடக காங்கிரஸின் இரட்டைக்குழல் துப்பாக்கியாக தன்னுடன் சிவகுமாரை சேர்த்துக்கொண்டது சித்தராமையாவின் சாணக்கிய கணக்கில் சேரும்.

“இந்த தேர்தலே எனது கடைசித் தேர்தல்” என்று வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னரே சித்தராமையா முதல்வர் இருக்கையில் துண்டு போட்டிருந்தார். வருணா தொகுதியில் நின்று பாஜக அமைச்சர் சோமண்ணாவை தோற்கடித்த சித்தராமையாவுக்கு, டி.கே.சிவக்குமாரை எதிர்கொள்வதுதான் கடினமாக மாறியது. ஆனபோதும் கடைசியில், அதிலும் வென்றிருக்கிறார்.

கன்னட மக்களுடன் களத்தில் நடனமாடும் சித்தராமையா

சித்தராமையாவின் திராவிட முகம்

இதன் பின்னணியில் சித்தராமையாவின் வெகுஜனத் தலைவர் பிம்பமும், அவரது மதசார்பற்ற கொள்கைகளும், எளிய மக்களுக்காக செயல்படுத்திய நலத்திட்டங்களுமே இருந்தன. சித்தராமையாவை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதன் மூலம், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு போட்டியாக, உதாரண காங்கிரஸ் ஆட்சியை கர்நாடகத்தில் காட்சிப்படுத்த டெல்லி தலைமை விரும்புகிறது. சிவகுமாரின் அதிரடிகள் அனைத்தும், தேர்தல் களத்துக்கு மட்டுமே தோதானவை. ஆட்சி நிர்வாகத்தில் சித்தராமையாவின் புத்திசாலித்தனத்துடன் சிவகுமாரால் போட்டியிட முடியாது என்பதையும் காங்கிரஸ் தலைமை உணர்ந்திருக்கிறது.

கார்கே உடன் சிவகுமார் மற்றும் சித்தராமையா
கார்கே உடன் சிவகுமார் மற்றும் சித்தராமையா

சித்தராமையாவின் அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் கிட்டத்தட்ட திராவிட சித்தாந்தகளோடு இயைந்து வந்திருப்பார். கன்னட மொழி பாதுகாப்புக்கான இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம், முழுமூச்சான பாஜக எதிர் நிலைப்பாடு, மாநில உரிமைக்கு முக்கியத்துவம், மூட நம்பிக்கைக்கு எதிரான முற்போக்கு என சித்தராமையா மெத்தவே திராவிட மாடலுக்கு பொருந்தக் கூடியவர். திராவிட கட்சிகள் கண்டடையாத ‘மாநிலத்துக்கான தனிக்கொடி’ கண்டதிலும் சித்தராமையாவின் தனித்துவம் அலாதியானது.

லிங்காயத், ஒக்கலிகர் என கர்நாடக மாநிலத் தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சாதி அரசியலுக்கு மாற்றாக, ’பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினத்தவர்’ ஆகியோரை உள்ளடக்கிய கூட்டமைப்பை முன்னதாக சித்தராமையா உருவாக்க முயன்றார். அதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல இம்முறை சித்தராமையா எடுக்கும் முயற்சி, பாஜகவை கர்நாடகத்தில் முடக்க வழிவகுக்கும் என்கிறார்கள். இதன் மூலம் கர்நாடக அரசியலின் சுக்கானாக செயல்படும் சாதி வாக்கு வங்கியை சித்தராமையா நிர்மூலம் செய்வார் என்றும் நம்புகிறார்கள்.

சித்தராமையா
சித்தராமையா

சித்தம் கனிவாரா சித்தராமையா?

மாநிலத்தில் மட்டுமன்றி, தான் கண்ட கொள்கையின் அடிப்படையில் நாடு முழுக்க மதச்சார்பற்ற தலைவர்களுடன் சித்தராமையா இணக்கம் உடையவர். இந்த வகையில் சித்தராமையாவை முதல்வர் நாற்காலியில் தெம்பாக அமர்த்துவது, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவிலும் உதவக்கூடும். வட இந்தியாவுக்கு சவால் விடும் தெற்கின் பிரதிநிதிகளாக, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோரோடு சித்தராமையாவும் தோள்சேர இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் - பினராயி விஜயன் - சித்தராமையா
மு.க.ஸ்டாலின் - பினராயி விஜயன் - சித்தராமையா

75 வயதாகும் சித்தராமையா, அவர் கூற்றின்படியே தனது அரை நூற்றாண்டு அரசியல் பயணத்தின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறார். கன்னட வரலாறு தன்னை நினைவுகூரத்தக்க முன்மாதிரி ஆட்சியைத் தர வேண்டும் எனவும் விரும்புகிறார். 40% ஊழல் ஆட்சியால் நொந்திருக்கும் மாநிலமும், கர்நாடகத்தை முன்மாதிரியாக்கி தேசிய அரசியலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்பும் காங்கிரஸ் கட்சியும் சித்தராமையாவின் அரசியல் புத்திசாலிதனத்தை அதிகம் நம்பியிருக்கின்றன.

காவிரியின் நீர்வரத்து முதல் சித்தராமையாவின் மாநில உரிமை நிலைப்பாடுகள் வரை, தமிழகத்தின் மக்களும், ஆட்சியாளர்களும் கூட சித்தராமையாவை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். சகலமானோருக்கும் சித்தம் கனிவாரா சித்தராமையா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in