அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரம்: அண்ணாமலை பேசுவது போல் ஆடியோ வெளியாகி பரபரப்பு!

அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரம்: அண்ணாமலை பேசுவது போல் ஆடியோ வெளியாகி பரபரப்பு!

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இதை எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அப்போது மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகுவதாக சரவணன் அறிவித்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கியது பாஜக.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தற்போதைய மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனும் பேசுவது போன்று ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேசும் நபர், மற்றொருவரிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கேட்டு, அனைவரையும் வர சொல்லுமாறு கூறுகிறார். மேலும் அந்த நபர், மாசாக பண்ண வேண்டும். கிராண்டாக பண்ண வேண்டும். வேறு மாதிரி பண்ணுவோம். இதை எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பண்ணிவிடுவோம் என்று கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வீடியோ குறித்து அண்ணாமலை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in