‘மதவெறிக்கு எதிராகப் பேசாமல் பிரதமர் மவுனம் காக்கலாமா?’

13 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை
‘மதவெறிக்கு எதிராகப் பேசாமல் பிரதமர் மவுனம் காக்கலாமா?’

மதவெறி பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்களுக்கு எதிராகப் பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. வார்த்தைகள் மற்றும் செயல் மூலம் சமூகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு எதிராகப் பிரதமர் பேசாதது குறித்து அக்கட்சிகள் அதிர்ச்சி தெரிவித்திருக்கின்றன.

வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்றும் 13 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

பல மாநிலங்களில் ராமநவமி ஊர்வலங்களின்போது வகுப்புவாத வன்முறை வெடித்ததைச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்தக் கூட்டறிக்கை, வெறுப்புப் பேச்சுகள், ஆவேசமான மத ஊர்வலங்கள் வகுப்புவாத வன்முறையைத் தூண்டிவிடுகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

சமூகவலைதளங்களும் ஒலி மற்றும் ஒளி தளங்களும் வெறுப்பையும் தவறான பார்வையையும் பரப்பும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் அந்த அறிக்கையில் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக இந்தியாவை வளப்படுத்திய சமூக நல்லிணக்கத்தின் இழைகளை வலுப்படுத்தவும், அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

கூடவே, அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட நாடு முழுவதும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் பணியாற்ற வேண்டும் என்றும் அந்தக் கடிதம் மூலம் 13 எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

இந்த அறிக்கையில் சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் கையெழுத்திடாதது குறித்தும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in