330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்: அமைச்சர் சேகர்பாபு மெகா ஏற்பாடு

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்: அமைச்சர் சேகர்பாபு மெகா ஏற்பாடு

தமிழ்நாட்டில் மகா சிவராத்திரி விழாவை 330 சிவாலயங்களிலும் கொண்டாட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களின் சார்பில் ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி நமது பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மிக, சமய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மயிலாப்பூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், பேரூர். திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 5 கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களிலும் பிப்.18-ம் தேதி மாலை முதல் 19-ம் தேதி காலை வரை மகா சிவராத்திரி திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடும் அனைத்து கோயில்களிலும் குறிப்பாக கோபுரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழுமையாக மின் அலங்காரங்கள், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து இரவு முழுவதும் பக்தர்கள் கண்டு பயன்பெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை அந்தந்த கோயிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் சிறப்பாக நடத்திட வேண்டும்.

அத்துடன் கலைநிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களைத் தேர்வு செய்யும் போது தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மற்றும் இசைப் பள்ளிகளில் பயின்ற கலைஞர்கள் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

மகா சிவராத்திரி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்திடவும், எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்கா வகையில் நிகழ்ச்சிகளை நடத்திடவும், கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவினைக் கண்டுகளிக்கும் பக்தர்கள் மனநிறைவடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in