யாருக்கு சிவேசேனா கட்சி? - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது குழுவை உண்மையான சிவசேனா என அங்கீகரிக்கக் கோரிய மனு மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. மேலும், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையின் போது ​​தலைமை நீதிபதி என்.வி. ரமணா, "மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சிலர் அரசியல் கட்சிகளை முற்றிலுமாக புறக்கணித்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தில்லையா" என்று ஏக்நாத் ஷிண்டேவின் முகாமுக்கு முக்கியமான கேள்வியை எழுப்பினார். இதற்கு, ஷிண்டே முகாம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, "இல்லை" என்று பதிலளித்தார்.

தேர்தல் ஆணையம் உண்மையான சிவசேனா யார் என முடிவு செய்வதை உத்தவ் தாக்கரே அணி விரும்பவில்லை. அதற்கு முன்னதாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் மீது தீர்ப்பு வரும் வரை தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர். ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் இரு தரப்பிடமும் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில், தகுதி நீக்க வழக்கிற்கு பின்னரே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு கோரிக்கை வைத்திருந்தது.

ஏக்நாத் ஷிண்டே தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று வாதிட்டார். 15 எம்எல்ஏக்கள் கொண்ட குழு 39 பேர் கொண்ட குழுவை கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்க முடியாது. உண்மையில் இது தலைகீழாக உள்ளது என்று அவர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே மூன்றில் இரண்டு பங்கு சிவசேனா எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சட்டசபையில் பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளார். ஆனால், கட்சியை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற, கட்சியின் அடிமட்டப் பிரிவுகளிலும் பெரும்பான்மைக்கான ஆதரவு தேவை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in