சிவசேனாவின் 'வில் அம்பு’ சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கே கிடைக்கும்: அடித்துக்கூறும் மத்திய அமைச்சர்

சிவசேனாவின் 'வில் அம்பு’ சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கே கிடைக்கும்: அடித்துக்கூறும் மத்திய அமைச்சர்

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் 'அசல் சிவசேனா’ என்று தெரிவித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சிவசேனாவின் ‘வில்அம்பு’ சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைக்கும் என கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு இரண்டரை ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யும். அதன் பிறகு மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். தற்போது 55 சிவசேனா எம்எல்ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ளனர், எனவே சிவசேனாவின் தேர்தல் சின்னமான 'வில் அம்பு' ஷிண்டே அணிக்கே செல்ல வேண்டும். அவர் சின்னத்திற்கு உரிமை கோருவார் என்று நான் நம்புகிறேன். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் அவருடன் உள்ளனர்" என்று கூறினார்.

மேலும், “உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டேவுக்கு சொந்தமானது. அவர் பால் தாக்கரேவை தனது தலைவராகப் போற்றுகிறார் . அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏக்களைக் கொண்ட பிரிவாக இருப்பதால், ஷிண்டே முகாமை அசல் சிவசேனாவாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 39 சிவசேனா எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதன் விளைவாக மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது. இதன் பின்னர் ஜூன் 30-ம் தேதி பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in