மல்லிகார்ஜுன கார்கேவையும் என்னையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை: சசி தரூர் வருத்தம்

சசி தரூர்
சசி தரூர்

பல்வேறு மாநிலங்களுக்குப் பிரச்சாரத்துக்கு சென்றபோது மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களை பார்க்கமுடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர் கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இந்த சூழலில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த சசிதரூர், "நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன், மாநில காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் பெரிய தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவை வரவேற்று, அவருடன் அமர்ந்து மக்களை சந்திக்கின்றனர். இவை அனைத்தும் ஒரு வேட்பாளருக்கு நடக்கிறது. ஆனால் எனக்கு ஒருபோதும் அப்படி நடக்கவில்லை.

நான் மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு சென்றபோது, மாநில காங்கிரஸ் தலைவர்கள் அங்கு இல்லை. நான் இதனைப் புகார் செய்யவில்லை, ஆனால் இந்த நடத்தையில் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா?" என கேள்வியெழுப்பினார்

மேலும், “திங்களன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்களிக்கும் காங்கிரஸ் பிரதிநிதிகளின் முழுமையற்ற பட்டியல்தான் எனக்கு கிடைத்துள்ளது. அவர்களிடம் தொடர்புகொள்ள எந்த தொலைபேசி எண்களும் பட்டியலில் இல்லை. அப்புறம் எவ்வாறு பிரதிநிதிகளை தொடர்பு கொள்ள முடியும்?. இது வேண்டுமென்றே நடந்தது என நான் கூறவில்லை. ஆனால் 22 ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை, அதனால் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மதுசூதன் மிஸ்திரி மற்றும் அவரது குழுவினர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த முயற்சிப்பதை நான் அறிவேன். நான் அவருக்கு எதிராக புகார் கூறவில்லை.

காங்கிரஸ் வாக்காளர்களைச் சென்றடையவும், எனது தேர்தல் அறிக்கையை அவர்களிடம் தெரிவிக்கவும் ஊடகங்களைச் சார்ந்துதான் இருக்கிறேன். சில தலைவர்கள் இந்த தேர்தலில் ஒருதலைபட்சமாக பாரபட்சம் காட்டியுள்ளனர், இது ஒரு சமதளம் அல்ல. நிச்சயமாக ஒரு சீரற்ற விளையாட்டு மைதானத்தை குறிக்கும் அம்சங்கள் இத்தேர்தலில் உள்ளன. எனவே கார்கேவை ஆதரிக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளதாக சில தலைவர்கள் என்னிடம் கூறினார்கள். கார்கே எங்கு சென்றாலும், காங்கிரஸின் பெரிய தலைவர்கள் அவரை வாழ்த்துகிறார்கள், அவருக்கு மாலை அணிவிக்கிறார்கள். அதேசமயம், நான் எங்கு சென்றாலும், சாதாரண காரியகர்த்தாக்கள் , எளிய மனிதர்கள் என்னிடம் உள்ளனர் ”என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in