திக்விஜய் சிங்கை சந்தித்த சசி தரூர்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அடுத்தடுத்து பரபரப்பு

திக்விஜய் சிங்கை சந்தித்த சசி தரூர்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அடுத்தடுத்து பரபரப்பு

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ள கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் திக்விஜய் சிங் ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், திக்விஜய் சிங்கை கட்டிப்பிடித்தபடி இருக்கக்கூடிய ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ இன்று மதியம் திக் விஜய் சிங் வருகை தந்தார். எங்கள் கட்சியின் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். எங்களுடையது போட்டியாளர்களுக்கு இடையேயான சண்டை அல்ல, சக ஊழியர்களுக்கு இடையிலான நட்புரீதியான போட்டி என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். காங்கிரஸை வெற்றி பெறச் செய்வதே எங்களின் பொதுவான குறிக்கோள்” என தெரிவித்துள்ளார்.

சசி தரூரின் பதிவை மறு ட்வீட் செய்துள்ள திக்விஜய் சிங், “ சசி தரூரின் கருத்துடன் உடன்படுகிறேன். எங்களின் போர் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானது. நாங்கள் இருவரும் காந்திய-நேருவிய சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள். வரவிருக்கும் போட்டிக்கு சசி தரூருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்தார்.

ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்களின் கிளர்ச்சிக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் வெளியேறியதைத் தொடர்ந்து, சசி தரூர் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் இந்த பதவிக்கான போட்டியில் தற்போது உள்ளனர்.

இவர்கள் இருவரும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். சசி தரூர் கடந்த வாரம் வேட்புமனுப் படிவத்தை வாங்கினார். திக்விஜய் சிங் இன்று வேட்புமனுவை வாங்கினார்.

ராஜ்யசபா எம்.பி.யும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், காந்தி குடும்பத்தின் விசுவாசியாக இருப்பவர். சசி தரூர், ஜி -23 காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். இந்த தலைவர்கள் 2020 ல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியில் பெரும் சீர்திருத்தங்களைக் கோரி கடிதம் எழுதியிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in