எமர்ஜென்சி காலத்தில் பொதுவாழ்க்கைக்கு வந்த சரத் யாதவ் காலமானார்

எமர்ஜென்சி காலத்தில் பொதுவாழ்க்கைக்கு வந்த சரத் யாதவ் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 75.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரத் யாதவ் குருகிராம் போர்டிஸ் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையின் உயிர் பிரிந்ததாக அவரது மகள் சுபாஷினி யாதவ் ட்விட்டரில் அறிவித்தார்.

இதனிடையே, சரத் யாதவ் உடலில் நாடித்துடிப்பு இல்லை எனவும் சிபிஆர் போன்ற சிகிச்சைக்கு பின்னரும் அவரை காப்பாற்ற முடியவில்லை எனவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் யாதவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "சரத் யாதவின் மறைவு வேதனை தருகிறது. தனது நீண்ட பொது வாழ்வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார்.

டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். சரத் யாதவுடன் நான் பழகிய தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும். குடும்பத்தாருக்கும் அனுதாபிகளுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார். மேலும், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் சரத் பவார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிஹார் மாநிலத்தை சேர்ந்த சரத் யாதவ் எமர்ஜென்சி காலத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தின் தாக்கத்தால் பொது வாழ்வுக்கு வந்தவர். இவர் 7 முறை மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை மாநிலங்களை உறுப்பினராகவும் இருந்தவர். அன்றைய ஜனதாதள கட்சியின் முன்னணி தலைவராக இருந்த சரத் யாதவ், 1989-ம் ஆண்டு முதல் முறையாக அமைச்சரானார். பின்னர் ஜார்ஜ் பெர்னான்டஸ், நிதீஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து ஐக்கிய ஜனதாளதம் கட்சியை 2003-ம் ஆண்டில் நிறுவினார். அக்கட்சியின் முதல் தேசிய தலைவராகவும் இருந்தார். 2018-ம் ஆண்டில் நிதீஷ் குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஐக்கிய ஜனதாளதம் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். சரத் யாதவிற்கு 1989-ல் திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகள் சுபாஷினி ராவ் அரசியலில் உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in