பாஜகவுக்கு செக்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரத் பவாரின் புளூபிரிண்ட் வியூகம்!

பாஜகவுக்கு செக்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரத் பவாரின் புளூபிரிண்ட் வியூகம்!

2024 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் செயல்திட்டத்தை சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் முன்வைக்கவுள்ளார்.

2019 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ்-சிவசேனா-என்சிபி எனும் சாத்தியமே இல்லாத கூட்டணியை சாத்தியமாக்கி பாஜகவை அதிரவைத்தவர் சரத் பவார். நடந்துமுடிந்த ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு பாலமாக பவார் இருந்தார். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பாஜகவுக்கு சவாலாக கைகோர்க்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

வரும் சனிக்கிழமை கூடும் என்சிபியின் விரிவாக்கப்பட்ட செயற்குழு கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, பொருளாதார சூழ்நிலையை மதிப்பீடு செய்தல், விவசாயிகள் பிரச்சினைகள், பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், மோடியை விமர்சிக்கும் தீர்மானங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற உள்ளது. "இந்த தீர்மானங்கள் எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான வரைபடமாக இருக்கும்" என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை டெல்லி தல்கடோரா மைதானத்தில் நடைபெறும் என்சிபி கட்சியின் எட்டாவது தேசிய மாநாட்டில் சரத் பவார் மற்றும் என்சிபி உயர்மட்ட தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இதில், 2022ம் ஆண்டிற்குள் மோடியின் வாக்குறுதிகளான கழிவறைகள் கட்டுதல், அனைவருக்கும் வீடுகள் வழங்குதல், அனைவருக்கும் குடிநீர் வழங்குதல் மற்றும் ஒவ்வொரு கிராமத்திற்கும் பிராட்பேண்ட் இணைப்பு போன்ற வாக்குறுதிகளின் தற்போதைய நிலை குறித்த கையேட்டையும் சரத் பவார் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரத்பவாரின் மதிப்பீட்டின்படி, எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது ஒரு மாயை அல்ல, கட்சிகளின் போட்டியிடும் வியூகத்தை சாமர்த்தியமாக கையாள்வதன் மூலமாகவும், மோடியை எதிர்கொள்வதற்கான பொதுவான வைராக்கியத்தின் மூலமாகவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியும் என அவர் நம்புகிறார்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, என்சிபி உள்ளிட்ட பல கட்சிகளுடன் காங்கிரஸ் இணக்கமாக செயல்பட தொடங்கியுள்ளதாக என்சிபி கட்சி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஆம் ஆத்மி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை ஒரே மேஜையில் கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சியும் மோடியை வீழ்த்துவதற்காக காங்கிரசுடனான உறவில் சில மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக என்சிபி தலைமை நம்புகிறது. ஆனால் அகாலிதளத்தையும் ஆம் ஆத்மியையும் ஒரே பக்கம் கொண்டு வருவது பஞ்சாபில் சவாலாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் தனது மாநிலத்தில் பாஜகவை வளர விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். இவை அனைத்தையும் கணக்கிட்டு கச்சிதமான ஒரு ‘புளூபிரிண்டை’ சரத் பவார் உருவாக்கியுள்ளார். இது நிச்சயமாக எதிர்க்கட்சிகளை ஒற்றுமைப்படுத்த கைக்கொடுக்கும் எனவும் அவர் நம்புகிறார்.

2024 தேர்தலுக்கான வெற்றியை நோக்கி தலைவர்கள் செயல்படுவதால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிரமாண்டமான முறையில் வெளிப்படுத்த பாட்னா, கொல்கத்தா மற்றும் மும்பையில் பேரணிகளை நடத்தவும் என்சிபி திட்டமிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in