
காங்கிரஸின் குடும்ப அரசியலால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கடந்த மாதம் சரத் பவாரின் அண்ணன் மகனும், என்சிபி மூத்த தலைவருமான அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏக்கள் பாஜக அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்தனர். மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து என்சிபி இரு அணிகளாக பிளவுபட்டது. ஆனாலும், சரத்பவார் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’யில் முக்கிய தலைவராக உள்ளார்.
ஆச்சர்யமளிக்கும் விதமாக இந்த மாத தொடக்கத்தில், புனேயில் நடைபெற்ற திலக் தேசிய விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் மேடையைப் பகிர்ந்து கொண்டார். சரத் பவாரின் இந்த செயல் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு படபடப்பை உருவாக்கியுள்ளது.
இந்த சூழலில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுடனான சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸும், சரத் பவாரும் சொந்த பந்தம் காரணமாக பல திறமையானவர்களை ஊக்குவிக்கவில்லை என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காங்கிரஸின் குடும்ப அரசியலால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியினரை கடுமையாக சாடிய பிரதமர் மோடி, அவர்களுடனான கூட்டணியை பாஜக முறிக்கவில்லை என்றார். என்.டி.ஏ கூட்டணியில் தனது கூட்டாளிகள் முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்திய பிரதமர், அனைவரும் ஒன்றாக இருந்து மரியாதையைப் பெறுவார்கள் என்றும் கூறினார். மேலும், காங்கிரஸைப் போல பாஜக திமிரோடு நடந்துகொள்ளவில்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.