'கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திராவிட மாடல் ஆட்சி!'

முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ புகழாரம்
'கல்விக்கொள்கையை வடிவமைக்கும்
திராவிட மாடல் ஆட்சி!'

புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த எல்லா வகையிலும் முனைந்திருப்பதை தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஏனெனில், அக்கல்விக் கொள்கை மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. அக்கொள்கையில் முழுவதும் இந்துத்துவ மயமாக்கல் இழையோடுகிறது. கல்வியைத் தங்கு தடையற்ற தனியார் மயமாக்கவும், வணிகமயம் ஆக்கவும் வழி வகுக்கிறது.

ஒரே நாடு; ஒரே கல்வி முறை என்பது ஒற்றை இந்து ராஷ்டிர திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பாதை என்பதையும் தேசிய கல்விக் கொள்கை உணர்த்துகிறது. சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்புக்கும் வகை செய்கிறது. மேலும் நவீன குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்துவதற்கான செயல்திட்டங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

இத்தகைய அபத்தங்களும், ஆபத்துகளும் விரவிக் கிடக்கும் தேசியக் கல்விக் கொள்கையால், திராவிட இயக்கத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான ஆட்சியில் தமிழ்நாடு பெற்றிருக்கும் முன்னேற்றம் குன்றி விடும். எனவேதான் தேசியக் கல்விக் கொள்கையை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். எந்த வடிவத்திலும் ஒன்றிய பாஜக அரசின் ஆர்எஸ்எஸ் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பது நம்பிக்கை தருகிறது.

கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்திருப்பதை வரவேற்கிறேன்.

இக்குழுவில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்துறை அறிஞர்களைத் தேர்வு செய்து உறுப்பினர்களாக நியமித்திருக்கும் முதல்வரைப் பாராட்டுகிறேன்.

தமிழக அரசு அமைத்துள்ள, புதிய கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு, தமிழ்நாட்டின் மரபுகள், கல்வி உரிமை, சமூக நீதி, மொழி, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் ஆகியவற்றின் தனித்துவமான அடையாளத்தை நிலைநாட்டும் வகையிலும், காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனைப் பெறும் வகையிலும் சிறந்ததோர் கல்விக் கொள்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

கல்வி பொதுப்பட்டியலின் கீழ் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு என கல்விக் கொள்கையை வடிவமைக்கும் உரிமையும் நமக்கு உண்டு என்பதை பறைசாற்றி உள்ள திராவிட மாடல் ஆட்சிக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in