
முன்னாள் பெண் எம்.பியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபவது போல வெளியான வைரல் வீடியோவால் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் திமுக,அதிமுக,பாஜக என எல்லா கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அப்போது பாஜக சார்பில் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளா் பொன்.பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளா் அஸ்வத்தாமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது முன்னாள் எம்பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்கு பின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதியும் வந்தார். அப்போது, அவர் அஞ்சலி செலுத்துவதில் கவனம் செலுத்தாமல், முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவை தொடுவது போன்றும், அதனை அந்தப் பெண் நிர்வாகி தடுப்பது போன்றும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில்பரவி, சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. அதனடிப்படையில் வருகிற 26-ம் தேதி எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் பொன்பாலகணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆணையம் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.