கனிமொழி எம்.பி., பங்கேற்ற திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் அச்சுறுத்தல்!

கனிமொழி எம்.பி., பங்கேற்ற திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் அச்சுறுத்தல்!

திமுக எம்பி கனிமொழி  கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியில் தொந்தரவு அளித்ததாக திமுக கட்சி நிர்வாகிகள் இருவருக்கு எதிராக புகார் வெடித்திருக்கிறது. இந்த ’பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்’ என காவல் ஆய்வாளரிடம் திமுக எம்எல்ஏ மல்லுக்கட்டியதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

நேற்று முன்தினம், சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருந்தினர்களாக திமுக எம்பிக்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடன் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் காவலர் ஒருவரிடம், கூட்டத்தில் இருந்த 2 இளைஞர்கள் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீற பெண் காவலர் கதறி அழுதுள்ளார். உடன் பணியில் இருந்த சக ஆண் காவலர் இதனை தட்டி கேட்டதும், சில்மிஷ பேர்வழிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஆய்வாளர் தாம்சன்சேவியர் தலைமையிலான போலீஸார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன்(23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம்(24) என்பதும், இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சித்தபோது, அங்கிருந்த திமுக நிர்வாகிகள் போலீஸாரை தடுத்து நிறுத்தி  வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் எம்எல்ஏ பிரபாகரராஜா தலையிட்டு இந்த பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் பிடிபட்ட நபர்கள் மீது போலீஸார் எந்த நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்துள்ளனர். பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த திமுகவினர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ’மேடையில் பெண்கள் குறித்து திமுகவினர் ஆபாசாமாக பேசுவது வாடிக்கையான ஒன்று. எம்பி கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலரிடம் திமுக கட்சி நிர்வாகிகள் நடந்து கொண்ட விதம் அதிகார மமதையின் வெளிப்பாடு. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகாரில் விருகம்பாக்கம் போலீஸார் சிஎஸ்ஆர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in