‘சந்திரசேகர் ராவ் கட்சியில் பல ஏக்நாத் ஷிண்டேக்கள் உள்ளனர்’ - பரபரப்பு கிளப்பும் பாஜக!

‘சந்திரசேகர் ராவ் கட்சியில் பல ஏக்நாத் ஷிண்டேக்கள் உள்ளனர்’ - பரபரப்பு கிளப்பும் பாஜக!

‘சந்திரசேகர் ராவின் அரசியல் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் பல ஏக்நாத் ஷிண்டேகள் உள்ளனர்' என்று தெலங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி அரசை ஆட்சியைவிட்டு அனுப்ப வேண்டும், பாஜக அல்லாத அரசு வர வேண்டும் என்று பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் பாஜகவும் அவர்மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பாண்டி சஞ்சய் , "பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பது முதல்வர் கேசிஆருக்கு எப்படி தெரியும்?. பாஜகவிடம் எந்த வியூகமும் இல்லை என்று மாநில முதல்வர் கூறுகிறார். பாஜகவிடம் எந்த வியூகமும் இல்லை என்றால் எப்படி 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்க முடியும். இதுபற்றி முதல்வர் பயன்படுத்தும் மொழி வெட்கக்கேடானது.

பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதல்வர் கேசிஆருக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறார், ஆனால் கேசிஆர் அவரின் பண்ணை வீட்டை விட்டு வெளியே கூட வருவதில்லை” என தெரிவித்தார்

மேலும், “கேசிஆர் ஏக்நாத் ஷிண்டேவைப் பற்றி அதிகமாக பேசுகிறார். முதலில் அவரின் சொந்தக் கட்சியைப் பார்க்கவேண்டும். தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் ஏக்நாத் ஷிண்டே அதிகம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏக்நாத் ஷிண்டே போன்ற பல தலைவர்கள் தனது சொந்த கட்சியில் வளர்ந்து வருவதை பார்த்து கேசிஆர் அஞ்சுகிறார். அவரது மகன் கேடிஆர், மகள் கவிதா அல்லது மருமகன் ஹரிஷ் ராவ் என யார் வேண்டுமானாலும் ஏக்நாத் ஷிண்டே ஆகலாம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக நேற்று பாஜகவை தாக்கி பேசிய சந்திரசேகர் ராவ், "இந்திரா காந்திக்கு நன்றி, அவர் அது நேரடியாக எமர்ஜென்சியை அறிவிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார். ஆனால் இன்று இந்தியாவில், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளது" என்று பேசியது பரபரப்பை உருவாக்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in