ஏழு மாவட்டங்களுக்கு மட்டும் மாற்றம்: வெளியானது திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்

ஏழு மாவட்டங்களுக்கு மட்டும் மாற்றம்: வெளியானது திமுக  மாவட்ட செயலாளர்கள் பட்டியல்

திமுக தொண்டர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மாவட்ட செயலாளர்கள் பட்டியல் திமுக தலைமை கழகத்தால் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி மொத்தமுள்ள 72 மாவட்ட செயலாளர்களில் ஏழு பேர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர்.  மீதமுள்ள  மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்களே பதவியில்  தொடர்கிறார்கள்.

திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. அதன் இறுதிக்கட்டமாக  மாவட்ட செயலாளர், அவைத்தலைவர்,  துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான  வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது.

தேர்தல் நடைபெறாத நிலையில் இப்பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி சமூகமான முறையில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள்,  துணைச் செயலாளர்கள்,  அவைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் 72 மாவட்ட செயலாளர்களில் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவியில் தொடர்கிறார்கள்.  நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதில் செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வரதராஜனுக்கு பதில் தளபதி முருகேசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ராமச்சந்திரனுக்கு பதில் ரவி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த பூபதிக்கு பதில் சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த இன்பசேகரனுக்கு பதில் அமமுகவிலிருந்து வந்த பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதில் அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   பழனியப்பனுக்கு தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படும் என்பதை நாம் முன்பே எழுதியிருந்தோம். அதன்படியே அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மற்றபடி தற்போதைய அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், சக்கரபாணி, ரகுபதி செந்தில் பாலாஜி சிவசங்கர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன், மா. சுப்ரமணியன்  உள்ளிட்டவர்கள் மாவட்ட செயலாளர்களாக  தொடர்கிறார்கள்.

தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் மாவட்ட செயலாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் திமுகவின் புதிய அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த  ஆர்.எஸ்.பாரதி, திமுக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in